மீண்டும் சினிமாவில் முதல்வர் ஜெயலலிதா?

Thursday,28th of February 2013
சென்னை::தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் இதயேந்திரன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவனது இருதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்தனர் அவனது பெற்றோர்கள். இதயேந்திரன் இருதயத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் துணிச்சலுடன் எடுத்துச் சென்று இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே உடல்உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து மலையாளத்தில் "டிராபிக்" என்ற படம் வெளிவந்தது. பாப்பி-சஞ்சய் இயக்கினர். பெரிய வெற்றியும் பெற்றது.

தற்போது டிராபிக்கை ராதிகா சரத்குமார் தமிழில் "சென்னையில் ஒரு நாள்" என்ற பெயரில் தயாரித்து வருகிறார். பாப்பி-சஞ்சையின் உதவியாளர் ஷாகீத் காதர் இயக்குகிறார். சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ், பிரசன்னா, பார்வதி, இனியா, ஐஸ்வர்யா உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடிக்கிறது. சென்னையில் இருந்து இருதயத்தை எடுத்துக் கொண்டு வேலூர் செல்வது போன்று கதை மாற்றி அமைக்கப்பட்டு படம் தயாராகிறது. ஷூட்டிங் முடிந்து டப்பிங், எடிட்டிங் பணிகள் நடந்து வருகிறது.

இந்தப் படம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என்பதால் தமிழக முதல்வர் ஜெயலிதாவை இதில் தோன்ற வைக்க சரத்குமார் முயற்சி செய்து வருகிறார். இருதயத்தை பாதுகாப்பாக எடுத்துச் சென்ற போலீஸ் அதிகாரி, ஆம்புலன்ஸ் டிரைவர், டாக்டர், உதவியாளர், டிராபிக் போலீஸ் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா பாராட்டி பரிசு வழங்குவது போன்று ஒரு காட்சியை இணைக்க சரத்குமார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அல்லது படம் துவங்கும் முன் முதல்வர் ஜெயலலிதா உடல் உறுப்பு தானம் பற்றி சிறிய உரை நிகழ்த்துவது போன்ற காட்சியையாவது இணைத்து விடலாம் என்று முயற்சித்து வருகிறார். இதுகுறித்து தனது விருப்பத்தை முதல்வரிடம் உரியவர்கள் மூலம் தெரிவித்து விட்டதாகவும். அவர் தரப்பிலிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்ததும் முதல்வர் எந்த காட்சியை விரும்புகிறாரோ அதை படமாக்கவும் சரத்குமார் தயாராக இருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் முதல்வர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Comments