Sunday,10th of February 2013
சென்னை::துப்பாக்கி, விஸ்வரூபம் படங்களைத் தொடர்ந்து, புதிய படங்கள் வெளியீட்டிற்கு பல்வேறு தடைகள் தொடர்வதால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தவையற்ற எதிர்ப்புகளால், பட வெளியீடு தாமதப்படுவதால், கோடிக்கணக்கில் நஷ்டமடைய வாய்ப்பு ஏற்படும் என்ற அச்சம், தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கமலின், "விஸ்வரூபம் படத்தையடுத்து, மணிரத்னத்தின், "கடல், அமீரின், "ஆதிபகவன், ஹரியின், "சிங்கம் 2 மற்றும் "ஆண்டவ பெருமாள் படங்களுக்கு, சில தரப்பில்இருந்து திடீர் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது.
"விஸ்வரூபம்; இது குறித்து, தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: "விஸ்வரூபம் படத்திற்கு, சென்சார் மூலம், "யு/ஏ சான்றிதழ் பெற்ற பிறகு, படத்தில் பிரச்னை வருவதற்கு, எந்த முகாந்திரமும் இல்லை என, கமல் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் உதவியை கேட்டிருக்க வேண்டும்."விஸ்வரூபம் படம் பிரச்னையில், கமல் மட்டுமே, அவருக்கு தெரிந்த வழியில், முடிவு காண முயன்றதால் தான், படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. கமலின் நிலையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தவர்கள், இயக்கங்கள் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளனர். மொத்தத்தில், "விஸ்வரூபம் படப்பிரச்னையில், கமல் ஏற்படுத்திக் கொண்ட சமரசம் காரணமாக, அடுத்தடுத்த படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. எந்த அமைப்பு, எந்த இயக்கம் எப்போது மிரட்டுமோ என்ற அச்சத்தோடு படத்தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
"கடலுக்கு சிக்கல் : மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கவுதம் கார்த்திக் - துளசி நடித்துள்ள,"கடல் படத்திற்கு, சென்சார் போர்டு மூலம், "யு சான்றிதழ் வழங்கப்பட்டு, திரைக்கு வந்துள்ளது. ஆனால், "இப்படத்தில், கிறிஸ்தவ பாதிரியார்கள் பற்றி தவறான எண்ணம் உருவாகும் வகையில் காட்சிகள் உள்ளன. ஒரு காட்சியில், ஏசுவின் சிலை உடைந்து இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. இதற்கு, "யு சான்றிதழ் வழங்கியது தவறு. படம் திரையிட தடை விதிக்க வேண்டும் என, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அமீர் இயக்கியுள்ள, "ஆதிபகவன் படத்தில், இந்து சமய நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகவும், படத்தை இந்து இயக்க தலைவர்களுக்கு திரையிட்டு காட்டிய பின்பே, தியேட்டரில் திரையிட அனுமதிக்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சியின் சார்பில், சென்னை தலைமை செயலகத்தில், முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த படங்கள் : இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள, "சிங்கம்-2 படத்தில், "முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது போல, காட்சிகள் உள்ளதென்றும், இக்காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என, தவ்ஹீத் ஜமா அத் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதுமுகங்கள் நடித்து, இம்மாதம், 22ம் தேதி வெளியிடப்பட உள்ள, "ஆண்டவ பெருமாள் படத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும். "கடவுளுக்கு சம்பந்தமில்லாமல், காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஆண்டவபெருமாள் என, இந்து கடவுள் பெயரை வைத்து கொச்சைப்படுத்தியுள்ளனர் என, தமிழ்நாடு இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பின் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமை : இப்படி, வரிசையாக தமிழ் படங்கள் சிக்கலில் மாட்டும்போது, சம்பந்தப்பட்ட படத்தினர் மட்டுமே, தனித்து நின்று போராட வேண்டி உள்ளது. சென்சார் சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட படங்களுக்கு, எதிர்ப்பு உருவாகும் போது, திரையுலக சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எழுந்துள்ளது. இதற்காக, சினிமா சங்கங்கள் ஒன்றிணைந்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Comments
Post a Comment