சூர்யா படம் இயக்க கவுதம் மேனனுக்கு சிக்கல்!!!

Tuesday,5th of February 2013
சென்னை::புதிதாக சூர்யா படம் இயக்க உள்ள கவுதம் மேனன் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதால் அவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படத்தை அடுத்து ‘துப்பறியும் ஆனந்தன்’ என்ற படத்தை கவுதம் மேனன் இயக்க உள்ளார். இதற்கிடையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் எல்ரெட்குமார் கூறும்போது,‘கவுதம் மேனன், தயாரிப்பாளர் மதன் ஆகியோருடன் நட்புடன் இருந்தேன். ஆனால் இப்போது வழக்கு தொடரும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் பட தயாரிப்புக்காக ரூ.4.25 கோடி கொடுத்திருந்தேன். ஆனால் இப்போது ‘துப்பறியும் ஆனந்தன்’ என்ற பெயரில் சூர்யா நடிக்கும் படம் இயக்கப்போவதாக கவுதம் அறிவித்துள்ளார்.

இப்படம் தொடங்குவதற்கு முன் நான் தந்த பணத்தை திருப்பி தர வேண்டும் அல்லது எங்கள் நிறுவனத்துக்கு கவுதம் மேனன் படம் இயக்கி தரவேண்டும் என்று கேட்டேன். தற்போது இதுதொடர்பாக கவுதம்மேனன், மதன் இருவர் மீதும் கோர்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். இந்த வழக்கில் வரும் 11ம் தேதி வரை கோர்ட் தடை வழங்கி உள்ளது’ என்றார். இதுபற்றி தயாரிப்பாளர் மதன் கூறும்போது,‘விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு பிறகு எல்ரெட் குமார், கவுதம் மேனன் இருவரிடம் இருந்தும் பிரிந்துவிட்டேன். இருவருமே ‘விண்ணை தாண்டி வருவாயா (இந்தி), ‘நீதானே என் பொன்வசந்தம்’ படங்களில் பணியாற்றினார்கள். இதுபற்றி வக்கீலிடம் பேசி பிரச்னைக்கு கோர்ட்டில் முடிவு காண்பேன்’ என்றார்.

Comments