மேடையில் நடனம் ஆடுவதை கைவிடமாட்டேன்: நாட்டியம்தான் முக்கியம் பிறகுதான் நடிப்பு - விமலா ராமன்!!!

Monday,11th of February 2013
சென்னை::மேடையில் நடனம் ஆடுவதை கைவிடமாட்டேன். நாட்டியம்தான் முக்கியம் பிறகுதான் நடிப்பு என்றார் விமலா ராமன். ‘பொய், ‘ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் விமலா ராமன். அவர் கூறியது: பாலிவுட்டிற்கு செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான நடிகைகளின் எண்ணமாக இருக்கிறது. அதில் நடித்தால் சர்வதேச அளவில் புகழ் பெற முடியும். என்னைப் பொறுத்தவரை எல்லா மொழிகளில்லும் நடிக்க விரும்புகிறேன். நல்ல கதை, கேரக்டர் வரும்போது மொழி ஒரு தடை கிடையாது. அதுபோல் பாலிவுட் பட வாய்ப்பு வந்தபோது ஏற்றுக்கொண்டேன். இந்தியில் நான் நடித்த ‘மும்பை மிர்ரர்“ படம் ஹிட்டாக அமையவில்லையே என்கிறார்கள். அப்படம் வெளியான நேரத்தில் சில பெரிய நடிகர்களின் படங்களும் வெளியானது.

ஆனாலும் இப்படத்துக்கு போதுமான வரவேற்பு கிடைத்தது. தென்னிந்திய படங்களை வெறும் ஏணியாகவே பலர் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்திய திரையுலகம் தென்னிந்தியாவிலிருந்துதான் உருவாகி இருக்கிறது. இது வரலாறு. தென்னிந்திய நடிகை என்று என்னை கூறுவதை பெருமையாக எண்ணுகிறேன். இன்றைய காலகட்டத்தில் எல்லாமே இந்திய திரையுலகம் என்ற ஒரே எல்லைக்குள் வந்திருக்கிறது. எனக்கு பரதநாட்டியம் பிடிக்கும். 200க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகள் தந்திருக்கிறேன். அடுத்த வாரம் ஆஸ்திரேலியா செல்கிறேன். பரதநாட்டியத்துக்குதான் முதல் முக்கியத்துவம் பிறகுதான் நடிப்பு. ஒருபோதும் நாட்டியம் ஆடுவதை நிறுத்தமாட்டேன் என்றார்.

Comments