த்ரிஷா வேடத்தில் நடிக்கிறேன்’ : ஸ்ருதி ஹாசன் பேட்டி!!!

Friday,1st of February 2013
சென்னை::எல்லோருக்குமே ஹிட் தேவைப்படுகிறது’ என்றார் ஸ்ருதி ஹாசன். அவர் கூறியதாவது: தெலுங்கில் 3, இந்தியில் 2 , தமிழில் 1 என இந்த ஆண்டு கைநிறைய படங்கள் இருக்கிறது. ராம் சரண் நடிக்கும் ‘எவடு’ தெலுங்கு படத்தில் கவுரவ வேடத்தில் நடிப்பதாக எழுதுகிறார்கள். அந்த படத்தில் ஹீரோயினாகத்தான் நடிக்கிறேன். அடுத்து ரவி தேஜா இயக்கும் ‘பலுபு’ படத்தில் காமெடி கலந்த வேடம். இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. ஆக்ஷன், பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படம் மூலம் முதல்முறையாக ரவிதேஜா இயக்கத்தில் நடிக்கிறேன். ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன். ஏற்கனவே ஒருமுறை அவருடன் நடிக்க வந்த வாய்ப்பு கால்ஷீட் இல்லாததால் கைநழுவிப் போனது.

இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘கபார் சிங்’ படத்தை இயக்கிய ஹாரிஸ் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இந்தியில் பிரபு தேவா இயக்கும் ‘ராமய்யா வஸ்தாவய்யா’ படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் உருவான படத்தைத்தான் இந்தியில் அவர் ரீமேக் செய்கிறார். தெலுங்கில் த்ரிஷா நடித்த வேடத்தை இந்தியில் நான் ஏற்கிறேன். ஏற்கனவே பிரபுதேவாவை எனக்கு நன்கு தெரியும். அவரது இயக்கத்தில் நடிப்பது ரொம்பவும் சவுகரியமாக இருக்கிறது. இது தவிர தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறேன். சினிமாவை பொறுத்தவரை எல்லோருக்குமே ஹிட் தேவைப்படுகிறது. அதேநேரம் மக்கள் ரசனைக்கு ஏற்ப நடிப்பதும் முக்கியம். கடின உழைப்பின் மூலம்தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறேன். இவ்வாறு ஸ்ருதி கூறினார்.

Comments