Monday,4st of February 2013
சென்னை::நடிகர் கமலஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ திரைப்படம் இந்தியில் ‘விஸ்வரூப்’ என்ற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை வட மாநிலங்களில் வெளியானது.
வடமாநிலங்களில் சுமார் ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை அழிப்பதை மையக்கருவாக கொண்ட இந்தப் படத்துக்கு வடமாநில ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளதால் வடமாநில ரசிகர்கள் ஆவலுடன் வந்து ‘விஸ்வரூப’த்தை கண்டுகளிக்கிறார்கள். இதனால் வட மாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி கிடைத்துள்ளது.
இதை உறுதிப்படுத்துவதுபோல ‘விஸ்வரூபம்’ படத்தின் வசூலும் நல்லவிதமாக உள்ளது. வடமாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ படம் முதல் நாளே ரூ.1.89 கோடியை வசூலித்து கொடுத்தது. 2-வது நாளான சனிக்கிழமை வசூல் தொகை ரூ. 2.57 கோடியை தாண்டியது.
ரஜினியின் ‘ரோபோ’ படம் இந்தியில் ரிலீசான முதல் நாள் ரூ.1.75 கோடிதான் வசூலித்தது. ‘விஸ்வரூபம்’ ரோபோவை மிஞ்சி வசூல் சாதனை படைத்துள்ளது. நேற்றும் ரூ.2.60 கோடிக்கு மேல் வசூல் கிடைத்தது. இதன் மூலம் முதல் 3 நாட்களில் விஸ்வரூபம் படம் சுமார் ரூ.7 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விஸ்வரூபம்’ வெளிநாடுகளிலும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment