100-வது நாளை கொண்டாடிய விஜய்யின் துப்பாக்கி!!!

Thursday,21th of February 2013
சென்னை::சமீபத்திய தமிழ் சினிமாக்களில் ஒரு படம் 25நாட்கள் ஓடுவதே குதிரை கொம்பாக இருக்கிற வேளையில் விஜய்யின் துப்பாக்கி படம் 100வது நாளை கொண்டாடி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் தீபாவளி விருந்தாக நவம்பர் 13ம் தேதி ரிலீஸ் ஆன படம் துப்பாக்கி. ஸ்லீப்பர் செல் எனும் பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட் இப்படம் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு விஜய்யாக, முற்றிலும் ஸ்டைலான விஜய்‌யாக துப்பாக்கி படம் காட்டியது.

ஆரம்பத்தில் தலைப்பு பிரச்னை பின்னர் படம் ரிலீஸ் ஆன பின்னர் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு என்று சில பிரச்னைகளை சந்தித்த துப்பாக்கி படம் எதிர்ப்புகளையும் கடந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. சுமார் ரூ.70 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் இரண்டு வாரத்திலேயே ரூ.100கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. மேலும் இதுநாள் வரை ரூ.200கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகியோரின் சினிமா கேரியரிலேயே துப்பாக்கி படம் தான் அதிக வசூலை கொடுத்த படம்.

துப்பாக்கி படம் இன்று(பிப்-21) 100வது நாளை கொண்டாடி உள்ளது. வசூல் ரீதியாக மட்டும் இல்லாமல், துப்பாக்கி படம் 100வது நாளையும் எட்டியுள்ளதால் இந்த 100வது நாளை ஒரு பெரிய விழாவாக எடுத்து கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இதில் துப்பாக்கி படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் அழைத்து நினைவு பரிசு வழங்க இருக்கிறார் தாணு. கடைசியாக விஜய் நடித்த காவலன், நண்பன், துப்பாக்கி போன்ற படங்கள் ஹிட் அடித்துள்ளதால் விஜய்யின் ரசிகர்கள் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவரது அடுத்த படத்தையும் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே தமிழில் ஹிட் அடித்த துப்பாக்கி படத்தை இப்போது இந்தியில் அக்ஷ்ய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார் டைரக்டர் முருகதாஸ்.

Comments