Saturday,12th of January 2013
சென்னை::திரையுலகினருக்கு விதிக்கப்பட்ட சேவை வரிக்கும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் அஜீத், கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரையுலகினர் சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளாத நடிகர் அஜீத், தற்போது சேவை வரிக்கு எதிரான தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
சேவை வரி குறித்து கருத்து தெரிவித்துள்ள அஜீத், "ரயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ எனத் தெரியாது. நான் திரை உலகினர் மீது சுமத்தப்பட்டுள்ள சேவை வரி பற்றி மட்டும் குறிப்பிட வில்லை. கட்டண உயர்வு, வரி விதிப்புக்குப் பதிலாக, நமது நாட்டிலுள்ள ஊழல் தலைவர்கள் மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை நம் நாட்டு அடிப்படைத் தேவைகள் வளர்ச்சிக்காக செலவு செய்ய முன்வந்தாலே போதும்.
நமது நாடு வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவோ, ‘டாப் டென்’ பணக்கார நாடுகளில் ஒன்றாகவோ மாறும். ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டு இங்கிருந்து மொத்த வளங்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றனர். இந்த உண்மையை நாம் மக்களுக்கு புரிய வைத்தால் அவர்கள் மீண்டும் சிந்திப்பார்கள். ஆனால் ஆங்கிலேயரை விட நமது நாட்டில் உள்ள ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர்.
கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். 1947-ல் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் இந்தியா, பாகிஸ்தானுக்கான சுதந்திரம் வழங்குவது பற்றி பேச்சவார்த்தை நடந்த போது, ஒரு அரசியல் வல்லுநர், இது நடந்தால், அதிகாரம் அனைத்தும் அயோக்கியர்கள் கையில் போகும். மக்களுக்கு பயனற்ற தலைவர்கள் உருவாகும் நிலைதான் ஏற்படும். அந்த மாதிரி தலைவர்கள் இனிப்பான நாவையும், காட்டமான இதயத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதிகாரத்துக்காக அவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்வார்கள். இவர்கள் உண்டாக்கும் குழப்பமான அரசியல் கூச்சலில் இரண்டு நாடுகளுமே தொலைந்து போகும் என்றாராம். நாட்டில் இப்போது உள்ள நிலையைப் பார்த்தால் சுவாசிக்கிற காற்றுக்கும், குடிக்கிற நீருக்கும் வரி விதிக்கும் நாள் நிச்சயம் இங்கே வரும்." என்று கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment