Friday,11th of January 2013
சென்னை::அறிமுக இயக்குநர்களும், உதவி இயக்குநர்கள் புலம்பி வந்த கதை திருட்டு பிரச்சனை தற்போது பழம் தின்று கொட்டைப் போட்ட அனுபவ இயக்குநர்களையும் புலம்ப வைத்திவிட்டது. அப்படி ஒரு புலம்பலைத்தான் இந்திய சினிமாவின் திரைக்கதை ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் இயக்குநரு, நடிகருமான கே.பாக்யராஜ் புலம்பிக்கொண்டிருக்கிறார்.
தான் இயக்கிய 'இன்று போய் நாளை வா' படத்தின் கதையைதான் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற தலைப்பில் படமாக்கிகொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய இவர், இராம.நாராயணன், இயக்குநர் கே.பாலச்சந்தரின் மகளும், தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசுவாமி உள்ளிட்டவர்கள் மீது போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த பிரச்சனை குறித்து சந்தானம், இராம.நாராயணன் தரப்பும், பாக்யராஜ் தரப்பும் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை சொல்ல, இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொருவரான புஷ்பா கந்தசுவாமியும், தன் பக்கம் உள்ள நியாயத்தை சொன்னதுடன், தொடர்ந்து இந்த பிரச்சனையில் எனது பெயரை பயன்படுத்தினால், பாக்யராஜ் மீது சட்டப்படி வழக்கு தொடருவேன் என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்த பிரச்சனையில் எதுக்கு என் பெயரை இழுக்கிறார்னு தெரியல. அவரை சந்தித்து நான் இன்று போய் நாளை வா படத்தின் ரீமேக் உரிமையை கேட்டேன் என்று சொல்வதே பொய். நான் எந்த நேரத்திலும் அவரை சந்தித்து இது பற்றி கேட்கவில்லை. முன்பெல்லாம் தமிழ் படங்களை தமிழிலேயே ரீமேக் செய்யும் வழக்கம் இல்லாமலிருந்தது. இப்போதுதான் அந்த வழக்கம் வந்திருக்கிறது.
இது மாதிரி ரைட்ஸ் வேணும்னு நினைக்கிறவர்கள் அந்த காப்பி ரைட்ஸ் யாரிடம் இருக்கோ, லேப் என்டாஸ்மெனட் யாருகிட்ட இருக்கோ, அவர்களிடமே வாங்கிக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது. டைரக்டருக்கு முழு பணத்தையும் செட்டில் பண்ணிவிடுகிற போது இந்த உரிமையையும் எழுதி வாங்கிக்கிற தயாரிப்பாளர்களும் இங்கு உண்டு. ஆர்.வி.மணியிடம் நான் வாங்குவதற்கு முன் சட்டப்படி உறுதி படுத்திக் கொண்ட பிறகுதான் வாங்கினேன். அது மட்டுமல்ல, சினிமா சங்கங்களிடம் ஆலோசனை கேட்டுதான் வாங்கினேன். ஏதோ பெரிய அளவில் பணம் கைமாறிவிட்டதாகவும் அவர் நினைக்கிறார். உண்மையில் அதுவும் இல்ல.
யாரையும் ஏமாத்தி சம்பாதிக்கணும்னு நினைக்கிற குடும்பத்திலிருந்து நான் வரவில்லை. எங்க அப்பா பாலசந்தர் சாரிடம் இல்லாத கதையையா நான் இன்னொருத்தரிடமிருந்து வாங்கி ரீமேக் பண்ணணும்?
இதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த விஷயத்தில் தொடர்ந்து அவர் என் பெயரை பயன்படுத்தினால், நானும் சட்டப்படி அவர் மீது வழக்கு தொடர வேண்டி வரும்." என்று கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment