Tuesday,9th of January 2013
சென்னை::விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதியின் அறிவுரைப்படி அரசு அதிகாரிகள் கமலுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். பேச்சுவார்த்தையில் விஸ்வரூபம் படத்திலிருந்து பலி கொடுக்கும் போது புனித நூலான திருக்குரான் ஓதுவது, தீவிரவாதி முல்லாஉமர் மதுரை, கோவையில் இருப்பது போன்ற காட்சிகள் உட்பட கிட்டத்தட்ட 1 மணி நேர காட்சிகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்களாம்.
’ஒரு சில காட்சிகளை வேண்டுமானால் நீக்கலாம். ஒருமணிநேர படத்தையெல்லாம் நீக்க முடியாது’ என்று கமல் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் இன்று(29.01.13) நீதிபதி வழங்கவிருக்கும் தீர்ப்பின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.
விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்திருப்பது குறித்து கேட்ட போது இயக்குனர் அமீர் “ இஸ்லாமியர்களை புண்படுத்தும் காட்சிகள் விஸ்வரூபம் படத்தில் இருந்தால் அதை நான் கண்டிக்க தவறமாட்டேன். அதே சமயத்தில் அப்படி எவ்வித காட்சிகளும் இல்லாத பட்சத்தில் கமலுக்கு உறுதுணையாக நின்று என் ஆதரவை தெரிவிப்பேன். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இப்போதைக்கு என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது” என்று கூறியிருந்தார்.
அடுத்தநாளே அமீர் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளிவரவிருக்கும் ‘ஆதிபகவன்’ படத்தின் மீது சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரை செல்வம் ஆகியோர் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்திருக்கின்றனர். புகாரில் “ முன்பு அமீர் இயக்கத்தில் வெளிவந்த ‘ராம்’ என்ற இந்துக்கடவுள் பெயர்கொண்ட படத்தில் கதாநாயகனை சுயநினைவு இல்லாதவனாக சித்தரித்திருந்தார்கள். இது இந்துமக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் இருந்தது. இப்போது
மறுபடியும் ‘ஆதிபகவன்’ என்ற சிவன் கடவுள் பெயர் கொண்ட படத்தை எடுத்துள்ளார்.
இதிலும் இந்துக்கடவுளை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருக்குமோ என சந்தேகிக்கிறோம். எனவே ஆதிபகவன் படத்தை தணிக்கை செய்வதற்கு முன்பு எங்களுக்கும், தேர்தல் ஆணையத்தினால் அங்கீகாரம் செய்யப்பட்ட இந்து அமைப்புகளுக்கும் திரையிட்டு காட்டுமாறு
கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
தமிழ்த்திரையுலகில் இதுபோன்று தொடர்ந்து வழக்குகள் தொடுக்கப்பட்டுவரும் சமயத்தில் தீபாவளிக்கு வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெடித்த துப்பாக்கி படத்தின் மீதான வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. விஸ்வரூபம், துப்பாக்கி படங்களின் மீதான புகார்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை என்பதால் இந்த தீர்ப்பு முக்கியத்துவன் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த நீதிபதி “ துப்பாக்கி படத்திலிருந்து இஸ்லாமிய மக்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்கக்கோரியும், அந்த படத்திற்கு வழங்கப்பட்ட ‘யூ’ சான்றிதழை திரும்பப்பெற கோரியும் தொடுக்கப்பட்ட புகாரை விசாரித்ததில், படத்திலிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டதாலும், தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் அதிகாரம் மத்திய அரசின் தணிக்கை குழுவின் பணி என்பதாலும் தணிக்கைக் குழுவிடம் மறுபடியும் துப்பாக்கி படத்தை தணிக்கை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த புகார் மனுவையே தணிக்கை மறுபரிசீலனை மனுவாக ஏற்றுக்கொள்ளுமாரு தணிக்கைக் குழுவிடம் பரிந்துரை செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
பிரம்மாண்டமான அளவில் படம் எடுப்பதைவிட, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் படத்தை வெளியிடுவதே இக்காலத்தில் படைப்பாளிகளுக்கு சவாலாக இருக்கிறது. இதுபோலவே விக்ரம், ஜீவா நடிப்பில் வெளிவரவிருக்கும் டேவிட் இரண்டு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘கடல்’ படமும் ஒரு கிறிஸ்தவ மீனவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம்,
ஆதிபகவன் படங்களைத் தொடர்ந்து இந்த படங்களுக்கும் ஏதாவது பிரச்சனை வருமா? என்று தமிழ் சினிமாவின் படைப்பாளிகளிடமும், தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பெரிய சந்தேகம் எழுந்திருக்கிறது.
Comments
Post a Comment