Friday,25th of January 2013
சென்னை::விஸ்வரூபம்' படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது கலாசார தீவிரவாதம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"விஸ்வரூபம்' படத்தின் சிறப்பு காட்சிக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு சென்றுள்ள அவர், அங்கிருந்து வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
எனக்காகவும், "விஸ்வரூபம்' படத்துக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்களை எண்ணி நெகிழ்கிறேன்.
முஸ்லிம் நண்பர்களுக்கு எதிராக "விஸ்வரூபம்' எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது. ஒரு நடிகன் என்பதையும் தாண்டி மனிதநேயத்துடன் என் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்து - முஸ்லிம் அமைதிக்காகப் பணியாற்றும் "ஹார்மனி இந்தியா' என்ற அமைப்பில் நான் அங்கம் வகிக்கிறேன். மதத்தை இழிவுபடுத்தியதாக கூறும் குற்றச்சாட்டுகளால் என் மனம் புண்படவில்லை.
தொடர்ந்து வரும் எதிர்ப்புகள் என் உணர்வுகளை அவமானப்படுத்தும் வகையில் உள்ளன. அரசியல் ஆதாயங்களைத் தேடிக் கொள்ளவே சில சிறிய குழுக்கள் என்னை அதற்கான கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இப்படி செய்வதால் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என அவர்கள் எண்ணுகின்றனர். இது ஒரு கலைஞனாக என்னை வேதனை அடைய செய்துள்ளது. எனக்கு மட்டுமே இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. நியாயமான தேசப்பற்று மிக்க முஸ்லிம் யாரும் இப்படத்தை பார்த்தால் பெருமைப்படுவார்கள். இதைக் கவனத்தில் கொண்டுதான் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன்.
இப்போது இருக்கும் இந்த சூழ்நிலையை சட்டப்படி அணுகுவேன். இது போன்ற கலாசார தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும்.
இது தொடர்பாக குரல் கொடுத்து வருபவர்களுக்கு மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
டிக்கெட் பணத்தை திரும்ப தர முடிவு: விஸ்வரூபம் படத்தை பார்க்க ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுக்கான கட்டணத்தை திரும்ப தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment