திருட்டு லட்டு - சந்தானம் மீது புகார்!!!

Sunday,6th of January 2013
சென்னை::சந்தானம் தயா‌ரித்து நடித்து வரும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை என்னுடையது, சந்தானம் அனுமதியின்றி திருடிவிட்டார் என உதவி இயக்குனர் ஒருவர் புகார் கூறியிருக்கிறார் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சந்தானம் ராம.நாராயணனுடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயா‌ரித்து வருகிறார். சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், அறிமுக நடிகர் சேது ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கும் இந்தப் படத்தில் விஷாகா ஹீரோயினாக நடித்துள்ளார். விஷாகாவை மூன்று பேரும் காதலிப்பதுதான் படத்தின் ஒன் லைன். சிம்பு நடிகர் சிம்புவாக ஒரு காட்சியில் வருகிறார். அவரை இயக்குகிறவராக கௌதம்.

இந்தப் படத்தின் கதை தனக்கு சொந்தமானது என உதவி இயக்குனர் நவீன் சுந்தர் என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழில் ஒரு படம் வெளியானால் அப்படம் ஏதாவது வெளிநாட்டுப் படத்தின் காப்பியாக இருக்கும், அல்லது நவீன் சுந்தர் மாதி‌ரி யாராவது இது என்னுடைய கதை என்று சொந்தம் கொண்டாடுவார்கள். இந்த திருவிளையாடலை பார்த்துப் பார்த்து அனைவரும் சலித்துவிட்டனர். ஆனாலும் நவீன் சொல்வதில் உண்மை இருந்தால்...? அவரது புகாரையும் பார்த்து விடுவோம்.

அன்புள்ள சிம்பு என்றொரு கதையை எழுதி சந்தானத்திடம் சொல்லியிருக்கிறார் நவீன் சுந்தர். சந்தானம் முக்கிய வேடத்திலும், சிம்பு சிறப்புத் தோற்றத்திலும் எழுதப்பட்ட கதை. சிம்புவின் கால்ஷீட் கிடைத்த பிறகு கதையை என்ன செய்வது என்று பார்க்கலாம் என்றாராம் சந்தானம். இந்நிலையில் தனது கதையையே கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற பெய‌ரில் எடுத்திருக்கிறார்கள், ட்ரெய்லரைப் பார்க்கும் போதே இதனை தெ‌ரிந்து கொள்ள முடிகிறது என நவீன் சுந்தர் அறிக்கையில் தெ‌ரிவித்துள்ளார்.

இவர் 20 வருடங்களாக சினிமாவில் இருக்கிறாராம். நியாயம் கிடைக்கவில்லையெனில் உண்ணாவிரதம் இருப்பேன், தற்கொலைக்கும் முயற்சிப்பேன் என்று அவர் சொல்லியிருப்பதைப் பார்த்தால் லட்டை பூந்தியாக்காமல் விடமாட்டார் என்று தோன்றுகிறது.

Comments