Sunday,13th of January 2013
சென்னை::சுராஜின் முந்தையப் படங்களான படிக்காதவன், மாப்பிள்ளை-யிலிருந்து எந்த மாறுதலும் இல்லாமல் வந்திருக்கிறது அலெக்ஸ் பாண்டியன். ஒரு சமூகத்தின் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருகிறது என்ற வகையில் கமர்ஷியல் சினிமா தவறில்லை என்பதுடன் முக்கியமானதும்கூட. அதேவேளை கதை தொடங்கி காட்சி, கதாபாத்திரம் உள்பட எதிலும் துளி லாஜிக்கின்றி, சுவாரஸியத்தின் வாசனையே இல்லாமல் காமெடி என்றால் அழகான பெண்கள் எல்லாம் லூசுத்தனமாக ஹீரோவை சுற்றி வருவதும், ஆக்சன் என்றால் ஹீரோ நூறு பேர் வந்தாலும் நொறுக்கித் தள்ளுவதுமாக ஒரு அரைவேக்காட்டு படைப்பு முன் வைக்கப்படும் போது நமது பொறுமையின் எல்லைகள் ஆவியாகிவிடுகின்றன.
தமிழ் சினிமாவில் தவிர்க்கப்பட வேண்டிய அபத்தங்களை தொகுத்தால் அதுதான் அலெக்ஸ் பாண்டியன். இதன் கற்பனை வறட்சி கதையில் தொடங்குகிறது. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை தமிழகத்தில் விற்பனை செய்ய முயலும் வில்லன் (மிலிந்த் சோமன்). அவனுக்கு உதவும் உள்ளூர் சாமியார், ஒரு மருத்துவர் (சுமன்). மருந்துகளை விநியோகிக்க சி.எம்.-மின் அனுமதி வேண்டும். அவர் அனுமதி மறுக்க, அவரின் மகளை (அனுஷ்கா) சில்லறை கிரிமினல் (கார்த்தி) ஒருவனை வைத்து கடத்துகிறார்கள். கையெழுத்து போடாவிட்டால் மகள் காலி. சி.எம். சம்மதிக்கிறார்.
வெண்ணைய் திரண்டு வருகிற நேரத்தில் சி.எம்.மின் மகள் தன்னை கடத்தியவனிடம் ஐம்பது லட்சம் வாங்கித் தருகிறேன், வில்லன்களிடம் ஒப்படைப்பதற்குப் பதில் அப்பாவிடம் கொண்டுவிடு என்கிறாள். அவனும் சம்மதிக்கிறான். இப்போது இருவரையும் வில்லன்கள் கோஷ்டி விரட்டிப் பிடிக்க... கிரிமினல் ஹீரோயினையும், நாட்டையும் காப்பாற்றுகிறார்.
மகளை கடத்தி சி.எம்.மின் கையெழுத்தை வாங்கினாலும் அடுத்த நாளே இன்னொரு கையெழுத்தில் அனுமதியை ரத்து செய்து அனைவரையும் கம்பிக்குப் பின்னால் தள்ள முடியும் எனும் போது இந்த வீக்கான பாயிண்டை இறுதிவரை இயக்குனர் பிடித்து தொங்குவது ஏன் என்று தெரியவில்லை.
சரி, இப்போது வருகிற படங்களில் அபத்தமில்லாத கதையேது, காட்சிகளாவது சுவாரஸியத்தை தருகிறதா என்றால் அந்த ஏரியாவிலும் ஒரே நூலாம்படைதான். மொத்த கதையில் வில்லன் கோஷ்டி இருவரையும் விரட்டுவதற்கும் பிடிப்பதற்கும் நடுவில் படத்தின் முதல்பாதி - ஏறக்குறைய ஒன்றேகால் மணிநேரம் ஓடிவிடுகிறது. சந்தானத்தின் வீட்டில் கார்த்தி தூரத்து சொந்தம் என்று அடைக்கலாமகி நடத்தும் ரவுசுகள்தான் முன்பாதி முழுக்க. சந்தானத்தின் அம்மா வயசுக்கு வந்த மூன்று மகள்களுடன் முன்பின் தெரியாத கார்த்திக்கு எண்ணைய் தேய்த்து குளிப்பாட்டுகிறார். காமெடியாம். தங்கைகளின் கர்ப்பப் பாத்திரத்தை கார்த்தி நிறைத்துவிடுவாரோ என்ற கவலையுடன் திரியும் கதாபாத்திரம் சந்தானத்துக்கு. இதுவே முன்பாதி முழுக்க வேறு வேறு காட்சியில் வேறு வேறு இடங்களில் ஒரேவித அலுப்புடன் அடைத்துக் கொள்கிறது. இப்படியே மூன்று படங்கள் நடித்தால் சந்தானத்துக்கு வையாபுரியின் இடம் நிச்சயம்.
ரவுடி, கிரிமினல்களை ஹீரோவாக காண்பிக்கும் சமீபத்திய தமிழ் சினிமாவின் வார்ப்புதான் இதன் கதநாயகனும். அசட்டு சிரிப்பு, ஆக்ரோஷ முறைப்பு இந்த இரண்டு டெம்ப்ளேட் உணர்ச்சிகளுக்கு மேல் கார்த்தியிடம் ஏதுமில்லை. பணத்துக்காக எதுவும் செய்யும் இவர்பால் அனுஷ்காவுக்கு காதல் ஏற்படுவது தமாஷ் காட்சி.
கெட்ட சேதி சொன்ன தனது ஆளையே சுட்டுக் கொல்வது, இடுப்பில் கை வைத்து கெக்கே பிக்கே என்று சிரிப்பது, க்ளோசப்பில் சவால்விடுவது, சர் சர்ரென்று பாயும் டாடா சுமோக்கள், யூனிஃபார்ம் அடியாட்கள் என்று வில்லன் ஏரியா இன்றைய தெலுங்கு இயக்குனர்களே தொடக் கூச்சப்படும் எண்பதுகளின் சகதியிலிருந்து மீளவில்லை.
கேட்க முடியாத இசை, பார்க்க முடியாத கோரியோகிராஃப் என படத்துக்கேற்ற மூடிகள். காட்சிகள் மாறும் போது இமேஜை மட்டும் சர் சர்ரென்று வைத்து காட்சியை தொடர்வது எடிட்டிங் இம்சை. ஆக்சனை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் ஆக்சன் காதுல பூ சமாச்சாரமாகவே கையாளப்பட்டிருக்கிறது. ஓடுகிற ரயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் பின்னால் அடியாட்களுடன் அரை மணிநேரம் குஸ்தி போட்ட பிறகு கார்த்தி ரயிலை தாவிப் பிடிக்கும் போதே படத்தின் திருமுகம் தெரிந்து விடுகிறது.
படத்தில் நல்லதாக எதுவுமே இல்லையா என்றால் உண்டு. கார்த்தியின் சட்டை மட்டும் அணிந்த அனுஷ்காவை பார்க்கையில் நெஞ்சுக்குள் பன்னீர் பாட்டில் சிலீரென வெடித்த இதம்.
நாகரிக வார்த்தைகளில் சொன்னால் இந்தப் படம் தமிழ் ரசனையின் துரதிர்ஷ்டம்.
Comments
Post a Comment