Wednesday, 9th of January 2013
சென்னை::2013 ஆண்டின் தொடக்கமாக நட்சத்திரப் போரை அறிவித்திருக்கிறார் பவர் ஸ்டார். சென்ற வருடம்வரை பவர் ஸ்டார் சீனிவாசன் என்று இவர் அறியப்பட்டார். வருட இறுதியில் சீனிவாசன் என்ற பல்லி வால் உதிர்ந்து தற்போது பவர் ஸ்டார் என்ற அடைமொழி மட்டுமே வழக்கில் உள்ளது. உலகில் ஒரே சூரியன், ஒரே நிலவு, ஒரே பின்லேடன் மாதிரி ஒரே பவர் ஸ்டார்.
சூப்பர் ஸ்டாருக்கு ஒரே போட்டி இந்த பவர் ஸ்டார் (அ) இந்த பவர் ஸ்டாருக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் என்ற புத்தாண்டு செய்தியுடன் நட்சத்திரப் போரை பவர் ஸ்டார் தொடங்கியதாக பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. காலில் கயிறுகட்டி காரை நிறுத்துவது, ஒரு மைல் தொலைவிலிருந்து ஓடுகிற ரயிலை தாவி பிடிப்பது போன்ற சண்டைக் காட்சிகளை ரசித்த தமிழக மக்களை இந்த நட்சத்திரப் போர் கவர்ந்திருப்பதாக டிஆர்பி புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.
பொண்ணுங்களுக்கு சில பசங்களை பார்த்த உடனே பிடிக்கும் என்றவர்களையும், பார்க்கப் பார்க்க பிடிக்கும் என்று பதிலளித்தவர்களையும், பொண்ணுங்களுக்கு என்னை பார்க்காமலே பிடிக்கும் என்ற பன்ச் டயலாக்கின் வழியாக பவர் ஸ்டார் தாண்டிச் செல்வதாக நிபுணர்கள் வரையறுக்கிறார்கள்.
வல்லவனுக்கு வல்லவன் திரையுலகினில் உண்டு என்ற முதுமொழிக்கேற்ப பவர் ஸ்டாருக்கு இனிமா தருவதற்கென்றே புதிய ஸ்டார் ஒன்று உதித்திருப்பதாக (ரைஸிங் ஸ்டார்) ஞானிகள் ஆருடம் கூறியிருப்பது 2013 ன் புதிய செய்தி. ராஜகுமார லட்சணங்களுடன் தெய்வ யானியின் கடாட்சத்துடன் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் அவர் துப்பாக்கி ஏந்தி வருவதை காண பிர்லா கோளரங்கத்தின் டெலஸ்கோப் வேண்டும். 2013 ல் நிஜமான போட்டி இந்த இருவருக்கும் நடுவில்தான் என்பதை சேட்டிலைட் அனுப்பியிருக்கும் புகைப்படங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஏலியன்ஸ் வெர்சஸ் பிரிடேட்டர் மாதிரி பிரளயத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளதால் இருவரின் பலம், பலவீனங்கள் முக்கியமானதாகிறது.
முதலில் பவர் ஸ்டார்
PR1. ஏற்கனவே அகிலம் அறிந்த பிகர் என்பது முக்கியமான பலம். திரையில் இவரைப் பார்த்ததும் க்ளுக் க்ளுக் என்று ஜனங்கள் முகம் மலரும் வசீகரம் கூடி வந்திருக்கிறது.
2. கோட் கோபிநாத் எத்தனை கேட் போட்டும் இவரை அடைக்க முடியவில்லை. அத்துடன் எத்தனை அடிச்சாலும் தாங்குறார் கைப்புள்ள இமேஜும் முக்கிய பலமாகிறது.
3. ஏற்கனவே இருக்கிற கோட்டிற்குப் பக்கத்தில் சிறிய கோடு ஒன்றை வரைந்து முந்தைய கோட்டை பெரிய கோடாக காண்பிக்கும் பிதாகரஸின் தியரிப்படி, சூப்பர் ஸ்டார் என்னோட போட்டியாளர் என்றும், ஷங்கர் என்னோட ரசிகர் எனவும் பெரிய ஆட்களை சின்ன கோடாக தனக்குப் பக்கத்தில் வரைந்து கொண்ட புத்திசாலித்தனம். பவர் ஸ்டார் என்றதும் தவிர்க்க முடியாமல் சூப்பர் ஸ்டாரும், ஷங்கரும் உங்கள் நினைவுக்கு வருகிறார்கள் அல்லவா?
பலவீனம் என்று பார்த்தால் இபிகோ வும், கம்பிக் கதவும். இருமுறை சிறை மீண்ட அனுபவம் பலவீனம் என்றாலும் நீதிக்காக சிறை சென்ற செம்மலே என பிற்காலத்தில் தியாகி இமேஜுடன் சரித்திரத்தில் இந்த பலவீனத்தையே பலமாக பதிய வைக்க முடியும்.
ரைஸிங் ஸ்டார்
1. துப்பாக்கியும், அதை பிடித்திருக்கும் ஸ்டைலும் நிச்சயம் இவர் பவர் ஸ்டாருக்கு போட்டி என்பதை சொல்கின்றன.
2. தெய்வ யானியின் பணபலமும், பக்க பலமும்.
3. லலலலா ராஜ்குமாரின் இசையும் பாடல்களும் ரசிகர்களின் நாஸ்டாலஜியை நாஸ்டா செய்யும் சாத்தியமுள்ளது.
PRதிரையில் இவர் தோன்றிய பிறகே முழுப் பலத்தையும் வரையறுக்க முடியும். இப்போது பொத்தம் பொதுவாக சில விஷயங்களை சொல்லலாம்.
ஆக் ஷன் மற்றும் நடனக் காட்சிகளில் இருவருக்கும் கடும் போட்டிக்கு வாய்ப்புள்ளது. நடனத்தில் பவர் ஸ்டாரின் கையே ஓங்கும் என்பதை அவரின் கடும் பயிற்சி உணர்த்துகிறது. ரொமான்ஸில் ரைஸிங் ஸ்டார் கவனம் ஈர்க்கிறார். ரைஸிங் ஸ்டாரின் துப்பாக்கி பிடித்திருக்கும் லாவகம் சண்டைக் காட்சியில் அவரே வெற்றி பெறுவார் என்பதை சொல்கிறது.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவருக்கே இறுதி வெற்றி.
டா தடியா...
இதே தலைப்பை தமிழில் வைத்திருந்தால் குண்டர்களின் சங்கம் வழக்கு தொடர்ந்திருக்கும். கேரளாவில் சிஎம் முக்கு முன்னால் அவரைப் போலவே வேஷமிட்டு மிமிக்ரி செய்யலாம். ஆட்டோ எல்லாம் வராது. டா தடியா என்றால் டேய் தடியா என்று பொருள். ஆஷிக் அபுவின் புதிய படம். சென்ற வருடம் கவனம் ஈர்த்த வாரிசுகள் - பாசிலின் மகன் பகத் பாசில், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் - மற்றுமொரு குண்டன் நடித்திருக்கிறார்கள். 120 கிலோவுக்கு மேல் இருந்தால் டிக்கெட் எடுக்க வேண்டாம், இலவசமாக இந்தப் படத்தைப் பார்க்கலாமாம். ப்ரி லக்கேஜ்.
ஆஷிக் அபுவின் நான்காவது படம் இது. முதல் படம் மம்முட்டியின் டாடி கூல், சுமார். இரண்டாவது சால்ட் அண்ட் பெப்பர், சூப்பர் ஹிட். மூன்றாவது 22 பீமெயில் கோட்டயம். இதில் தன்னை ஏமாற்றிய பகத் பாசிலின் அந்த மேட்டரை கேரட் மாதிரி நறுக்கி ட்ரிட்மெண்ட் தருவார் ரிமா கல்லிங்கல். நாமாக இருந்தால் ஆஷிக் அலி இருக்கும் பக்கமே தலை வைக்க மாட்டோம். பகத் பாசில் டா தடியாவில் விரும்பி நடித்திருக்கிறார். இதில் எதை வெட்டினார்களோ...?
Comments
Post a Comment