விமர்சனம் » கண்ணா லட்டு தின்ன ஆசையா!!!

Friday,18th of January 2013
சென்னை::ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வைக்காக மூன்று ஆண் நண்பர்கள் செய்யும் காமெடி கலாட்டாக்கள் தான் "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் மொத்த கதையும்!

பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், காமெடி சந்தானம், புதுமுகம் சேது மூவரும் ஒன்றாக குடித்து, ஒன்றாக கும்மாளமடிக்கும் நெருங்கிய நண்பர்கள். இவர்களது அந்த நட்புக்கு ஆப்பும், ஆபத்துமாக அந்த ஏரியாவிற்கு குடி வருகிறார் நாயகி விசாகா. விசாகா மீது மூவருக்குமே அளவிடமுடியாத காதல். அதனால் அவர்களது நட்பில் வருகிறது விரிசல்! அதை சரிகட்ட அவர்களுக்குள் எழுதப்படாத ஓர் சமாதான உடன்படிக்கை ஏற்படுகிறது. அதன்படி முட்டல், மோதல் இல்லாமல் மூவருமே விசாகாவிற்கு விருப்பமனு கொடுப்பது... அதில் யாரது மனுவை விசாகா விரும்பி ஏற்றுக் கொள்கிறாரோ...?! அவருக்கு விசாகாவை விட்டுக்கொடுத்துவிட்டு மற்ற இருவர் விலகிக் கொள்வது எனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அப்புறம்? அப்புறமென்ன...? அந்த ஒற்றை பிகருக்கு மூவரும் ஒவ்வொரு வகையில் ரூட்டை போடுகிறார்கள். யார் ரூட்டில் விசாகா விரும்பி பிரயாணிக்கிறார் என்பது க்ளைமாக்ஸ். பாக்யராஜின் "இன்று போய் நாளை வா" படத்‌தின் கதை தான் என்றாலும், அதில் சந்த(தா)னம் மணக்க, பவர் ஸ்ரீனி இனிக்க, பற்றாக்குறைக்கு பன்னீர் விசாகா வேறு...! படம் போவதே தெரியாமல் போவது "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் பெரிய ப்ளஸ்!

சேது, சந்தானம், பவர் ஸ்ரீனி என்று மூன்று ஹீரோக்கள் என்றாலும் சந்தானத்தையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் பவர்ஸ்டார்! "அப்படி எங்கிட்ட இல்லாதது சிம்புகிட்ட என்ன இருக்கு...?" என்று அந்த அப்பாவி மூஞ்சை வைச்சுகிட்டு அவர் அலப்பரை பண்ணுமிடத்தில் தியேட்டரே அதிர்கிறது. இதுமாதிரி ஸ்ரீனியால் தியேட்டர் அதிரும் சீன்கள் ஏராளம், ஏராளம்!! இனி இவரை "பலே ஸ்டார்" எனவும் அழைக்கலாம்! தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை மகிழ்விப்பது தான் காமெடி என்று சரியாக புரிந்து நடித்திருக்கும் பவர்ஸ்டாருக்கு, எத்தனை ஹேட்ஸ் ஆப் சொன்னாலும் அது போதாது என்றால் மிகையல்ல!!

சந்தானமும் பவரை கலாய்ப்பது தான் படத்தின் பலம் என்பதை உணர்ந்து படம் முழுக்க அதையே செய்வதுடன், விசாகாவுடனும் வித்தியாசமாக டூயட் பாடி தானும் இளம் ஹீரோக்களுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்பதை மீண்டும் ஹீரோவாகி நிரூப்பித்திருக்கிறார். பேஷ், பேஷ்! "நானும் எவ்வளவு நாளைக்குத்தான் ஊரான் காதலையே ஊட்டி வளர்ப்பது... எனக்கும் ஊட்டியில் டூயட் பாட ஆசையிருக்காதா..." என்பதில் ஆரம்பித்து க்ளைமாக்ஸில், "அவன் ஹீரோ ஆயிட்டான், நீ காமெடியன்தான் எனும் பவரிடம், நானாவது காமெடியன்னு தெரிஞ்சே காமெடியனா இருக்கேன், ஆனா, நீ அது தெரியாமலே காமெடி பண்ணிட்டிருக்கே பாரு..." என்று கலாய்ப்பது வரை கலக்கி இருக்கிறார்.

பாக்யராஜ் பாத்திரத்தில் வரும் ஹீரோ சேது, கதாநாயகி விசாகா, விடிவி கணேஷ், கோவை சரளா, சிவசங்கர் மாஸ்டர், தேவதர்ஷினி, பவரின் அப்பாவாக வரும் மேக்கப் புச்சிபாபு உள்ளிட்ட ‌ஒவ்வொருவரும் படத்தில் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே!!

தமனின் இசை, பாலசுப்ரமணியத்தின் கேமரா உள்ளிட்ட மேலும் பல ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், புதியவர் மணிகண்டனின் இயக்கத்தில், "கண்ணா லட்டு தின்ன ஆசையா", திரையரங்குகளின் வாசலில் தொங்கும் "ஹவுஸ்புல்" போஸ்டர்கள், பெருவாரியாக கூடும் ரசிகர்கள் கூட்டத்தை "இன்று போய் நாளை வா" என சொல்ல வைப்பது நிச்சயம், நிதர்சனம்!

ஆக மொத்தத்தில், "கண்ணா லட்டு தின்ன ஆசையா", தயாரிப்பாளர்களை "லட்ச லட்சமா துட்டு தின்ன கசக்குதா" என திகட்ட திகட்ட தின்ன வைக்கும் திரைப்படம்!

Comments