Tuesday,22nd of January 2013
சென்னை::இரண்டு மாதம் குடிசை பகுதியில் வசித்தார் ஸ்ரேயா. இதுபற்றி அவர் கூறியதாவது: ‘மிட்நைட் சில்ரன்’ படத்தில் பார்வதி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பேன் என்று என் மீது நம்பிக்கை வைத்தார் இயக்குனர் தீபா மேத்தா. குடிசைப் பகுதியில் வசிக்கும் பெண் வேடம். இந்த கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்வதற்காக குடிசை பகுதியில் சென்று 2 மாதம் வேலை செய்தேன். சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகம் தான் படமாகி இருக்கிறது. 1947ம் ஆண்டில் அபூர்வ சக்திகளுடன் பிறக்கும் ஒரு குழந்தையை மையமாக வைத்து நடக்கும் சம்பவத்தை தத்ரூபமாக பிரதிபலிக்கும் கதை. ஒட்டுமொத்த புத்தக கதையையும் இரண்டு மணி நேரத்தில் காட்டுவது சவாலான விஷயம்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு கதை சொல்லும். அதை தொகுப்பதும் சவாலாக இருந்தது. சினிமாவிற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதற்கு சல்மான் அனுமதித்தார். புத்தகமாக எழுதும்போதே அதில் சில மாற்றங்கள் செய்ய எண்ணியதாக அவர் குறிப்பிட்டார். இந்த படத்துக்காக கதக், ராஜஸ்தானி நடனங்கள் ஆட வேண்டி இருந்தது. இதற்காக எனது அம்மாவின் பழைய டிசைன்களுடன் கூடிய நகைகளை அணிந்தேன். சில நடன அசைவுகளை நானே செய்து காட்டியபோது அதை இயக்குனர் ஏற்றுக்கொண்டார். இந்திய திரையுலகில் நடிகையாக இருப்பது சிறப்பானது. இந்திய நடிகைகள் பலமொழிகளில் நடிக்கும் வாய்ப்பு பெறுகின்றனர். இந்தியில் ‘வால்மிகி கி பன்துக்’ என்ற படத்திலும், சில தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறேன். என்னை தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்கிறேன்.
Comments
Post a Comment