கண்ணா லட்டு தின்ன ஆசையா பட விவகாரம் ; சந்தானம் மீது பாக்யராஜ் பரபரப்பு புகார்!!!

Friday,18th of January 2013
சென்னை::பொங்கலன்று திரைக்கு வந்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் எனது இன்று போய் நாளை வா படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளரான சந்தானம் எனது கதையை திருடி விட்டதாக பிரபல இயக்குனர் பாக்யராஜ் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சின்னத்திரையில் நடித்து பின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ள சந்தானம், கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் சந்தானம் பவர் ஸ்டார் சீனிவாசன், புதுமுகம் சேது, விசாகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

பரபரப்பு புகார்: நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இன்று போய் நாளை வா படம் 1981 ஆம் ஆண்டு எனது திரைக்கதை, மற்றும் இயக்கத்தில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது. இக்கதைக்கான உரிமையை நான் சட்டப்படி வைத்துள்ளேன். இந்நிலையில் நடிகர் சந்தானம் தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் என் அனுமதியின்றி எனது கதையை திருடி திரைப்படமாக்கியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர்களான சந்தானம், இராமநாராயணன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கோர்ட்டு மூலம் வழக்கும் தொடர்ந்துள்ளேன். நான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை.

நான் தொடுத்துள்ள வழக்கின்படி, நீதிபதியின் உத்தரவின் பேரில் டைட்டில் என் பெயர் சேர்த்துள்ளனர். படத்தின் வசூல் நிலவரமும் அவர்களிடம் கேட்டுள்ளேன். கோர்ட்டில் இக்கதைக்கு உரிமையாளர் நான் தான் என்பதை நிரூபித்து அவர்களிடம் நஷ்டஈடு கேட்பேன். இவ்வழக்குதொடர்பாக இதுவரை அவர்கள் தரப்பில் இருந்து யாரும் என்னிடம் பேசவில்லை. நான் அவர்களிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

முதல் மூன்று நாளில் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம்ரூ.6.8 கோடியளவிற்கு வசூல் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Comments