திரைப்படத் துறையினருக்கு சேவை வரி விதிப்பதை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்!!!

Tuesday,8th of January 2013
சென்னை::மத்திய அரசின் சேவை வரி விதிப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் ரஜினி, சரத்குமார், விஜய் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் 12.36 சதவீதம் சேவை வரி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை முதல் இது அமலுக்கு வந்தது. சேவை வரி விதிப்புக்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சேவை வரியை ரத்து செய்யக்கோரி தமிழ்த் திரையுலகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கம், சென்னை திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டு, தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை தொழிலாளர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை நடிகர் சங்கம், சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தன. வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்துக்காக 250 அடி நீளம், 30 அடி அகலத்தில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டது.

போராட்டத்தை முன்னிட்டு நேற்று திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தியேட்டர்களும் மூடப்பட்டன. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் கருப்பு உடை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா, கார்த்திக், பிரகாஷ்ராஜ், பிரபு, சத்யராஜ், வாகை சந்திரசேகர், நடிகைகள் ராதிகா, ஸ்ரீபிரியா, ரம்யா கிருஷ்ணன், சினேகா, ரோகிணி, சுகாசினி, ரேகா, சுகன்யா, நமீதா, மும்தாஜ், ஓவியா, வடிவுக்கரசி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திர சேகரன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.ராஜன், கே.எஸ்.சீனிவாசன், அன்பாலயா பிரபாகரன், பிரமிட் நடராஜன், டைரக்டர் எஸ்.பி.ஜன நாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி மற்றும் சின்னதிரை கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாலை 5 மணிக்கு இயக்குனர் கே.பாலசந்தர் அனைவருக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரதத்தில், ‘நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் கலையின் மூலம் பாடுபட்டு வரும் கலைஞர்களுக்கு சேவை வரிவிதிப்பிலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும். கலையுலகின் பிரதிநிதிகள் விரைவில் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்‘ என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உண்ணாவிரத்தில் பேசியவர்கள் கூறியதாவது: எஸ்.ஏ.சந்திரசேகரன்: ஜூலை மாதம் முதல் சேவை வரியை அறிமுகப்படுத்தினாலும் சமீபத்தில்தான் சேவை வரி கமிஷனர் எங்களிடம், ‘இனியும் வரி கட்டாவிட்டால் நோட்டீஸ் அனுப்புவோம். பிறகு கடும் நடவடிக்கை எடுப்போம்‘ என்பதை மறைமுகமாக உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார். அதனால் நம் உணர்வை மத்திய அரசுக்கு தெரிவிக்க உண்ணாவிரதம் இருக்கிறோம்.

அமீர்: நமது நிதி அமைச்சர் முற்போக்கு சிந்தனை உடையவர். அவர் வெளிநாட்டில் விதிக்கப்படும் வரியை எல்லாம் இந்தியாவில் செயல்படுத்த நினைக்கிறார். நாம் அவரை சந்தித்து வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும். அவரை சந்திக்கச் செல்லும்போது ரஜினியையும் அழைத்துச் செல்ல வேண்டும். காரணம் அவர்தான், சமீபத்தில் வேட்டி கட்டிய தமிழன் நாட்டை ஆள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவர் ஆள வேண்டும் என்றால் நாம் வாழ வேண்டும்.

கே.பாலசந்தர்: ஒவ்வொரு காலகட்டத்திலும் திரைத்துறையில் சுனாமி வீசும். அதை சமாளித்து வந்திருக்கிறோம். இப்போதும் சுனாமி வீசுகிறது. அதையும் ஜெயிப்போம். இந்திய அரசு கண்டுபிடித்த விசித்திரமான வரி இது. சரத்குமார்: 1994,ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சேவை வரியில் மூன்று பிரிவுகள்தான் இருந்தது. 5 சதவிகிதத்தில் தொடங்கிய வரி, இப்போது 12.36 சதவிகிதமாக வளர்ந்திருக்கிறது. சில நடிகர்கள் கார், பங்களாவுடன் வாழ்வதை வைத்துக் கொண்டு எல்லோரும் அப்படித்தான் என்று வரிவிதிக்கக் கூடாது.

கமல், அஜீத் வரவில்லை

சென்னையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், முன்னணி நடிகைகள் கலந்துகொள்ளவில்லை. நயன்தாரா, அனுஷ்கா, அசின், சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால், த்ரிஷா, அஞ்சலி, ஸ்ருதிஹாசன், அமலா பால், லட்சுமி மேனன், லட்சுமி ராய் உட்பட பலர் பங்கேற்கவில்லை. அதுபோல் முன்னணி நடிகர்கள் கமல், அஜீத், சிம்பு, தனுஷ், ஆர்யா, வடிவேலு, சந்தானம் போன்றோரும் வரவில்லை. முன்னணி இயக்குனர்கள் சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

கருப்பு பணம் அதிகரிக்கும்: ரஜினி பேச்சு

உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்ற ரஜினி பேசியதாவது: திரையுலகினர் மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறேன். கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர, அரசு நிறைய சட்டம் போடுகிறது. இதுபோன்ற இதர வரிகள் ஜாஸ்தி ஆக, ஜாஸ்தி ஆக, கருப்பு பணம்தான் ஜாஸ்தியாகும். வரியை சரிவர கட்டாதவர்கள் யார் யார் என்று கண்டுபிடித்து அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்.

அப்படி செய்தாலே வேறு வரிகளை கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்காது. மத்திய அரசு திரைப்பட கலைஞர்கள் மீது விதித்திருக்கிற சேவை வரியை திரும்ப பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். காலை 10.45 மணிக்கு வந்த ரஜினிகாந்த் 11.25 மணி வரை உண்ணாவிரத மேடையில் அமர்ந்திருந்தார்.

Comments