விஸ்வரூபம் படப்பிரச்சினை: போட்டிக் கமிஷனில் கமல்ஹாசன் புகார்!!!

Monday,14th of January 2013
சென்னை::விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட விடாமல் தடுப்பதாக சில திரையரங்க உரிமையாளர்கள் மீது நடிகர் கமல்ஹாசன், இந்திய போட்டிக் கமிஷனில் (காம்படீஷன் கமிஷன்) புகார் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் படத்தை முதலில் இம்மாதம் 10ஆம் தேதி டி.டி.ஹெச். முறையில் வெளியிடுவதற்கு அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் திட்டமிட்டது. அதற்கு மறுநாள் திரையரங்குகளில் வெளியிட உத்தேசிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் காட்டிய கடும் எதிர்ப்பு காரணமாக டிடிஹெச்சில் படத்தை ஒளிபரப்புவது கிடப்பில் போடப்பட்டது.

இப்போது, தமிழகத்தில் 500 திரையரங்குகளில் விஸ்வரூபம் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. எனினும், இப்படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மதுரையைத் தலைமையகமாகக் கொண்ட ராமநாதபுரம் ஐக்கிய திரைப்பட விநியோகதஸ்ர்கள் சங்கம் ஆகியவை எச்சரித்துள்ளன. இந்நிலையில், விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட விடாமல் தடுப்பதாக சில திரையரங்க உரிமையாளர்கள் மீது நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், இந்திய போட்டிக் கமிஷனில் இந்த வாரத்தில் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக கமலஹாசனிடம் இருந்து புகார் வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நாங்கள் அடுத்த வாரத்தில் முடிவு செய்வோம் என்று கமிஷனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும், இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவிக்க கமல்ஹாசனின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார். முன்னதாக, தனது திரைப்படம் ஒன்றுக்கு யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் நெருக்கடி தரப்படுவதாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சமீபத்தில் போட்டிக் கமிஷனில் புகார் அளித்திருந்தார். மூன்று மாதங்களுக்குள் மற்றொரு பிரபல நடிகரின் படமான விஸ்வரூபம் தொடர்பான பிரச்சினை அங்கு விசாரணைக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Comments