முதலில் ஆந்திரா! பிறகுதான் தமிழகம் : மணிரத்னத்தின் தெலுங்கு பற்று!!!

Saturday,12th of January 2013
சென்னை::ஐதராபாத்:: இயக்குநர் மணிரத்னம், தனது கடல் படத்தின் மூலம் ஆந்திரா ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக ரசிகர்களை இரண்டாம் நிலைக்கு தள்ளியிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் ஹீரோவாக நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதமும், ஹீரோயினாக நடிகை ராதாவின் மகள் துளசியும் நடிக்கிறார்கள். இவர்களுடைய புகைப்படங்களை வெளி விடாமல் ரகசியமாக மணிரத்னம் வைத்திருந்தார். மேலும் பொது நிகழ்ச்சிகளில் இவர்கள் கலந்துகொள்வதற்கும் தடை விதித்திருந்தார். இந்த நிலையில் ஐதராபாத்தில் ஒரு பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்த மணிரத்னம் அந்த விழாவில் துளசியையும், கெளதமையும் அறிமுகம் செய்ததுடன் ஆந்திர பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழக ரசிகர்களை பின்னுக்கு தள்ளியிருக்கிறார் மணிரத்னம். இப்படத்தைப் பற்றி தமிழக பத்திரிகைகளுக்கு எந்தவித பேட்டியும் கொடுக்காத மணிரத்னம், தனது பிஆர்ஓ மூலம் அவ்வபோது சில முகம் தெரியாத கடல் படத்தின் புகைப்படங்களை மட்டும் அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறார்.

கார்த்திக்கும், ராதாவும் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமனார்கள். அவர்களுடைய வாரிசுகள் தற்போது ஒரே படத்தில் அறிமுகமாவதால் அவர்களைப் பார்க்க தமிழ் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். மேலும் தமிழகத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாலும், தமிழ்ப் படம் என்பதாலும் இப்படம் சம்மந்தமான நிகழ்ச்சி முதலில் தமிழகத்தில் தான் நடக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மணிரத்னத்தின் இந்த செயல் தமிழக ரசிகர்களை பெரும் ஏமாற்றமடைய செய்திருக்கிறது.

Comments