Saturday,5th of January 2013
சென்னை::பருத்திவீரனில் அறிமுகமாகி தனது யதார்த்தமான நடிப்பால் பையா, நான்மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என தொடர் வெற்றி படங்களை கொடுத்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து இருப்பவர் நடிகர் கார்த்தி. கடந்த 29ம் தேதி கார்த்தியிடம் தினமலர் வாசகர்களாகிய நீங்கள் உங்களது கேள்விகளை கேட்கலாம் என கேட்டிருந்தோம். அதன்படி வாசகர்களும் தங்களது கேள்விகளை கமென்ட் மூலமாக அனுப்பி இருந்தனர். வாசகர்களின் கேள்விகள் அனைத்தும் கார்த்தியிடம் கொடுக்கப்பட்டது. அதில் இருந்து 20 வாசகர்களின் கேள்வியை அவரே தேர்ந்தெடுத்து பதில் தந்திருக்கிறார். இதோ...
வாசகர் : ஸ்ரீனிவாசன்-ஞானசேகரன் - Brunei. வாரிசு என்பதை நிரூபித்ததில் பலர் உண்டு, இருந்தும் நீங்களும், தற்போது விக்ரம் பிரபுவும் அதில் விதிவிலக்கு. நல்லதொரு அறிமுக படத்திலேயே மன்னின் மைந்தர்களாகவே வாழ்ந்துவிட்டீர்கள். எப்படி சாத்தியமானது...?
கார்த்தி : இதற்கு முக்கிய காரணம், ஒரு கதை களமும், நல்ல இயக்குனரும் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் ஒன்றாக அமைவது தான். நாம் கடினமாக உழைக்கும்பொழுது, நம் திறைமைகளை வெளிக்கொண்டுவருவது அவர்கள் தான். அதே சமயத்தில், வெற்றி தோல்வி பற்றி யோசிக்காமல் நம்மை முழுமையாக அர்ப்பணிக்கும்பொழுது, நாம் எதிர்பாராத பலன் நமக்கு கிடைகிறது.
வாசகர் : கார்திராஜன்-இந்தியா. நீங்கள் நடித்ததிலேயே உங்களுக்கு பிடித்த படம் எது? பிடித்த டைரக்டர் யார்?
கார்த்தி : எனக்கு மிகவும் பிடித்த இயக்குனரும், கதையும் கிடைக்கையில் மட்டுமே, ஒரு படத்தை ஒப்புக்கொண்டு நடிக்கிறேன். அந்த வகையில் நான் நடித்த அனைத்து படத்தின் கதையும், இயக்குனர்களும் எனக்குப் பிடித்தவர்களே. அவர்கள் அனைவரும் என் மீது மிகவும் அதே அக்கறையோடு இருந்தனர்.
வாசகர் : பிரகாஷ்-ஸ்லோவாகியா. ஹாய் கார்த்திக் நீங்க நடிச்ச படங்களிலே உங்களுக்கு பிடிச்ச படம் எது? அதேபோல மத்தவங்க நடிச்ச படத்துல உங்களுக்கு பிடிச்சது? பவர்ச்டரோட பவர் எப்படி? உங்கள் கருத்து.
கார்த்தி : பருத்திவீரன், பிடித்த படங்கள் நிறைய இருக்கு, குறிப்பாக சமீபத்திய படங்களில் வாகை சூட வா, சுந்தரபாண்டியன், காஞ்சனா ஆகியவை. பவர் ஸ்டார் பற்றி நோ கமென்ட்ஸ்
வாசகர் : சிவராமசுப்ரமணியன்-ஈரோடு. உங்க படம் வந்தாலும் லேட்டாக வருது. வருஷம் 3 படமாவது நடிக்கலாமே? (எங்க ஊரு மாப்ள நீங்க, கரெக்டா பதில் சொல்லுங்க)
கார்த்தி : எனக்கும் நிறைய படங்கள் நடிக்க ஆசை தான். அப்படி செய்தால் 3 வருடங்களுக்கு ஒரு முறை கூட உங்க ஊருக்கு வர நேரம் இருக்காது. பரவாயில்லையா?
வாசகர் : பசி கரீம்-சென்னை. நீங்கள் யாருக்கு (நன்றி) கடன் பட்டுள்ளீர்கள் நினைவு இருக்கா..?
கார்த்தி : "நன்றி மறப்பது நன்றன்று" - இதை நானும் மறக்கவில்லை. நிச்சயமாக எனது பெற்றோருக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும்.
வாசகர் : மு.குமரேசன்-ஹோசிமின், வியட்நாம். தற்பொழுது உள்ள ஹீரோக்களில் உங்களுக்கு போட்டி என்று யாரை நினைக்கிறீர்கள்? நீங்கள் திரு.மணிரத்தினம் மற்றும் உங்கள் தந்தை இடம் இருந்து என்ன கற்று கொண்டீர்கள்? உங்களுடைய ரோல் மாடல் யார்? உங்கள் அண்ணனை (திரு .சூர்யா) பற்றி என்ன நினைக்கீறீர்கள்? உங்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன ? எதிர் காலத்தில் படம் இயக்கும் எண்ணம் உண்டா ?
கார்த்தி : எனது முந்தய படங்கள் தான் எனக்குப் போட்டி ; சினிமா மீதுள்ள தணியாத தாகமும், அதற்கு உண்மையாக இருத்தலும் ; அண்ணா (சூர்யா), சச்சின், ஏ.ஆர்.ரஹ்மான் ; பயம் ; அது நடிப்பதை விட கடினம்
வாசகர் : சபீக்-கோவை. நீங்க நடிச்ச படம் எல்லாமே நல்ல ஹிட், இதுக்கு என்ன காரணம்னு நீங்க நினைக்குறீங்க. 1.அந்த படத்தோட டைரக்டர். 2.நீங்க கதைய செலக்ட் பண்ணி பண்றீங்களா. 3.உங்க லக் ? 4. இல்ல வேற எதாவது காரணமா?
கார்த்தி : முக்கியமான காரணங்களை நீங்களே கூறிவிட்டீர்கள். இதைவிட முக்கியமாக மக்கள் படத்தை பார்த்து, தவறுகளை மன்னித்து பாராட்டி ஏற்றுக்கொள்வதே.
வாசகர் : ராமசுப்ரமணியன்-பாகிஸ்தான். அப்பாவோட சாயல் யாருக்கு நல்ல வருதுன்னு நினைகிறீங்க.உங்களுக்கா? சூர்யாவுக்கா..?
கார்த்தி : இருவருக்குமே உண்டு. அண்ணன் முகத்திலும், எனது பாடி லாங்குவேஜிலும் உள்ளது.
வாசகர் : மொக்கையன்-சென்னை. பருத்தி வீரன் மாதிரி தேசிய விருது படத்தில் அவ்வளவு உழைப்பை தந்து நடித்துவிட்டு, இப்பொழுது சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படத்தில் நடிப்பது பற்றி உங்கள் கருத்து?
கார்த்தி : ஒவ்வொரு படமும் பருத்திவீரன் போல் அமைவது கடினம். எனக்கு எல்லாவகையான படங்களிலும் நடிக்க நடிக்க ஆசை உண்டு. எனக்கு வருகிற கதைகளில் மிகநல்ல கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அப்படி இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் முதல் படத்தில் கொடுத்த அதே கடின உழைப்பு உள்ளது.
வாசகர் : பாண்டியன், கோவை. எப்போதும் சிரித்த முகமாகவே நடிக்கிறீர்களே, உங்களால் எப்படி முடிகிறது கார்த்தி? அரசியலுக்கு வரும் விருப்பம் உண்டா?
கார்த்தி : எனது சுபாவமே அதுதான்; சினிமா மட்டுமே எனது விருப்பம்
வாசகர் : சங்கர், சிங்கப்பூர். நீங்க உங்க அண்ணன் சூர்யாகூட ஒரு நெகடிவ் ரோல் கேரக்டர் பண்ணலாமே...? ரொம்ப நல்லா இருக்கும் கிளாஸ் அண்ட் மாஸ் !!!!! இது பற்றிய உங்கள் கருத்து??
கார்த்தி : தாராளமாக, நல்ல கதை உள்ளதா?
வாசகர் : தியாகு, பெங்களூரு. உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார்? எந்த ஹீரோயின் கூட நடிக்க ஆசைப்பட்டு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது உண்டா? அந்த ஹீரோயின் யார்?
கார்த்தி : ஜெயப்ரதா, அமலா....! அது நடக்குமா? நம்ம கொடுத்து வச்சது அவ்வளவுதான் பாஸ்...!!
வாசகர் : முரளி-சென்னை. சந்தானம் பற்றி உங்கள் கருத்து?
கார்த்தி : கடின உழைப்பாளி. நல்ல நண்பன். தமிழ் அகராதியில் புதுப்புது வார்த்தைகளை சேர்க்கும் பணியை செய்யும் அப்பாடக்கர்.
வாசகர் : எம்.ஹரிஹரன், சென்னை. உங்களுடைய படத்தில் எந்த காட்சிக்காக ரொம்ப ரிஸ்க் எடுத்து சிரமப்பட்டு நடித்தீர்கள்...?
கார்த்தி : டான்ஸ் தாங்க. சாங் ஆரம்பிச்சவுடனே ஜுரம் வந்துரும். பாவம் என் டான்ஸ் மாஸ்டர்கள்.
வாசகர் : மகேந்திரன்,கோவை. வணக்கம் திரு.கார்த்தி, சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களில் நடிக்கும் எண்ணம் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?
கார்த்தி : நல்ல கதையாக, அதே சமயத்தில் போதனையாக இல்லாமல் இயல்பாக இருக்கும் பட்சத்தில் ஏன் நடிக்கக்கூடாது?
வாசகர் : பசுல், சென்னை. புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா...? அல்லது ஏதேனும் கட்டுப்பாடு உள்ளதா? மாமா உண்மைய சொல்லுங்க.
கார்த்தி : என்னால் தவிர்க்கவே இயலாத கதையுடன் வந்தால், கண்டிப்பாக நடிப்பேன்.
வாசகர் : லக்கி, திருவள்ளூர். நீங்க வந்த பாதை உங்களுக்கு என்ன சொல்லி கொடுத்தது ?
கார்த்தி : கடின உழைப்பு
வாசகர் : கீதா, மதுரை. ஹாய் உங்களுடைய முதல் சம்பளத்தில் அப்பாவுக்கு கொடுத்த கிப்டு என்ன? நீங்க கல்யாணத்திற்கு அப்புறம் பார்த்த முதல் தமிழ் படம் என்ன? ஹாப்பி நியூ இயர் மற்றும் பொங்கல்.
கார்த்தி : எப்பவும் அதில் அம்மாவுக்குதான் முதல் இடம் ; தெய்வத்திருமகள்
வாசகர் : சுரேன், சத்தியமங்கலம். பிரியானி படத்தி்ல் வெங்கட்பிரபு உடன் பணியாற்றும் அனுபவம் எப்படி?
கார்த்தி : பள்ளிப்பருவம் முதல் இருவருக்கும் பழக்கம் உண்டு. மறுபடியும் bus stop - ல் நின்று அரட்டை அடிப்பது போன்ற அனுபவம்.
வாசகர் : ரவி, சென்னை. பணம் மற்றும் புகழ் தவிர சினிமாவில் நடிக்க என்ன காரணம் கார்த்தி?
கார்த்தி : இரண்டையும் தாண்டி ஸ்டார்ட் கேமரா, ஆக்ஷ்ன் என்ற அந்த சத்தம், அந்த வியர்வை, அந்த வலி, நம்மைக் கண்டதும் மக்கள் முகத்தில் வரும் அந்த உற்சாகப் புன்னகை...நிறைய சொல்லலாம்.
This comment has been removed by the author.
ReplyDelete