விஸ்வரூபம் பட பிரச்சினை: கமலஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு

Monday,10th of December 2012
சென்னை::விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்பும் கமல் முடிவுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் அதிருப்தி கோஷ்டி தலைவரான கேயார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-


விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்புவதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. 1989-ல் அபூர்வ சகோதரர்கள் படம் மூலம் ஓவர்சீஸ் பட வியாபாரத்தை சிறக்க வைத்தார் கமல். இதன்மூலம் சிங்கப்பூர், மலேசியாவில் மூடப்பட்ட தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கும் காரணமாக இருந்தார்.

ஹேராம் படம் சரியாக ஓடவில்லை என்றதும் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் பணம் கொடுத்தார். விஸ்வரூபம் படத்தை ரூ.50 கோடிக்கு திருட்டு வி.சி.டி.யில் எடுக்க பேரம் நடந்துள்ளது. அதை தடுப்பதற்கு டி.டி.எச்.-ல் ஒளிபரப்புவதை வரவேற்க வேண்டும் என்றார்.

டைரக்டர் பாரதிராஜா கூறும்போது:-

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்புவதை தியேட்டர் அதிபர்கள் எதிர்க்க கூடாது. தியேட்டர்களில் படத்தை தடை செய்தால் விஸ்வரூபம் படத்தை கமல் சேட்டிலைட் உரிமைக்கு வழங்கலாம். அப்படி நடந்தால் தியேட்டர்கள் பாதிக்கப்படும் என்றார்.

பிலிம்சேம்பர் தலைவர் பிரசாத்தும் ஆதரவு தெரிவித்தார்.

Comments