பாலுமகேந்திராவின் வீடு படம் திரையிடல்!!!

Thursday,13th of December 2012
சென்னை::தமிழர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்ள ஒருசில படங்களே உள்ளன. அதில் பாலுமகேந்திராவின் வீடு படமும் ஒன்று. குறைவான பட்ஜெட், நிறைவான நடிப்பு, அமைதியான திரைக்கதை, ஆழமான உணர்வுகள் என்று இப்படத்தின் நிறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ‌ஜிகினா மேலும் ‌ஜிகினா என்று சீரழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் நமது ரசனையை மீட்டெடுக்க அவ்வப்போதாவது வீடு போன்ற படங்கள் வர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அப்படியொரு யோகம் நமக்கு இல்லை. குறைந்தபட்சம் வீடு, அழியாத கோலங்கள் போன்ற படங்களை பார்ப்பதற்கும் அதுபற்றி விவாதிப்பதற்கும் ஒரு மேடையாவது கிடைக்க வேண்டும். அதனை தொடர்ந்து ஒழுங்கு செய்து வருகிறது தமிழ்ஸ்டுடியோ இணையதளம்.

தொடர்ந்து சிறந்த இந்திய திரைப்படங்களை இவர்கள் திரையிட்டு விவாதித்து வருகிறார்கள். அந்தவகையில் வரும் சனிக்கிழமை வீடு திரைப்படம் திரையிடப்படுகிறது. வெறுமனே படத்தைப் பார்த்துவிட்டு செல்லாமல் அதன் மீதான பார்வையாளர்களின் மதிப்பீடுகளை பகிரவும், அறியவும் இவர்கள் வழி செய்கிறார்கள். இந்த நிகழ்வில் பாலுமகேந்திராவும் கலந்து கொள்கிறார் என்பது இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை அதிக‌ரிக்கிறது.

ச‌ரியாக வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை வேப்பே‌ரியிலுள்ள பெ‌ரியார் திடலில் இப்படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து படம் குறித்த விவாதம். அனுமதி இலவசம். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

Comments