Friday,14th of December 2012
சென்னை::கும்கி என்ற பெயர் பிரபுசாலமன் தனது படத்துக்கு இந்தப் பெயரை தேர்வு செய்தப் பிறகுதான் பலருக்கும் தெரிய வந்தது. சரி, கும்கி என்றால் என்ன? அடம்பிடித்து ஊருக்குள் வரும் காட்டு யானைகளை மீண்டும் காட்டுக்குள் துரத்தும் பணியைச் செய்யும் யானைகளை கும்கி என்பார்கள். அப்படியொரு கும்கியின் பாகன்தான் இந்தப் படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு, நடிகர் பிரபுவின் மகன்
சிவாஜி பரம்பரையில் இளைய திலகம் பிரபுக்குப் பிறகு நடிப்புச் சங்கிலி அறுந்து போகாமலிருக்க அந்தக் குடும்பம் நம்பும் ஒரே நபராக விக்ரம் பிரபு இருக்கிறார். கதை கேட்டு, பிரபுசாலமனின் வேலை பிடித்து அவரிடம் விக்ரம் பிரபுவை செதுக்கும் பணியை ஒப்படைத்தார்கள்.
மைனா படத்துக்கு முன்புவரை பிரபுசாலமனை பலருக்கும் தெரியாது. அவர் இப்போது உலக சினிமா தரத்துக்கு கும்கி இருக்கு என்பது பீதியை கிளப்புகிறது. மைனாவுக்கு முன்பு இவர் இயக்கிய உலகப் படம் லாடம். மார்கன் பிரிமேன், பென்கிங்ஸ்லி, புரூஸ் வில்லீஸ் நடித்த லக்கி நம்பர் லெவன் படத்தின் மலிவான பதிப்பு. மைனாவில் சரியாக ஒரு மலைக்கிராமத்தை பிரதிபலித்தவர் மீண்டும் உலக சினிமா என்று பேசினால் பீதியடைவது இயற்கைதானே.
மலையோரமும், இயற்கை வனப்பும் படத்துக்கு தனி சோபையை தரும் என்று மைனாவில் பிரபுசாலமன் கண்டு பிடித்துள்ளார். கும்கியும் அதே ஃபிளேவரில் தயாராகியுள்ளது. இதுவும் காதல் கதை. என்றாலும் அந்த யானை எதாவது செய்யும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை படத்தின் ட்ரெய்லரும் படயூனிட்டின் பேச்சும் ஏற்படுத்தியுள்ளது.
இசை டி.இமான், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு, படத்தை வெளியிடுவது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் என்று பக்கா செட்டப். ஒளிப்பதிவு சுகுமார், பாடல்கள் யுகபாரதி என்று அதே பழைய மைகா டீம்.
விக்ரம் பிரபுவின் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமைய்யா, அஸ்வின் ராஜா. பொம்மன் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார். கஜராஜா என்ற பெயரில் தெலுங்கில் இப்படம் வெளியாகிறது.
சென்சார் யு சான்றிதழ் அளித்திருக்கும் இப்படம் இன்று திரைக்கு வருகிறது.
Comments
Post a Comment