Tuesday,11th of December 2012
சென்னை::தமிழ் சினிமாவில் இப்போதைக்கு காமெடியில் பிசியான நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் முதன்முறையாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை இயக்குனர் ராமநாராயணனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் சந்தானத்துடன் பவர் ஸ்டார் சீனிவாசனும், புதுமுகம் சேதுவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது.
சாதாரண நிகழ்ச்சியாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பவர் ஸ்டார் மற்றும் அவரது ரசிகர்களின் கைதட்டல், விசில் சத்தத்தால் களைகட்டியது. பவர் ஸ்டாரின் பேரை யார் உச்சரித்தாலும் திரையரங்கில் ஒரே விசில் சத்தமும், கைதட்டலுமாக இருந்தது. அந்தளவுக்கு கூட்டம் அலைமோதியது.
இவ்விழாவில் பவர் ஸ்டார் பேசும்போது,
அனைவருக்கும் இந்த லட்டு ஒரு திகட்டாத லட்டாக இருக்கும் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு எல்லோரும் சந்தோஷமாக நடித்திருக்கிறோம்.
திரையுலகில் நான் மீண்டும் முத்திரை குத்த வாய்ப்பளித்த அருமை தம்பி சந்தானத்துக்கு ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். நான்தான் நடிக்க வேண்டும் என்று தம்பி அன்புக் கட்டளையின் பேரில் நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.
தயாரிப்பாளர் ராமநாரயாணன் என்னை அழைத்து என்னிடம் ஒப்பந்தம் போட அவ்வளவு தயக்கம் காட்டினார். ஒரு அரைமணி பேச்சுவார்த்தைக்கு பின் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி நடிக்க வாய்ப்பளித்த அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதன்பிறகு என் அன்பு, ஆசை, அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ’ படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நான் சற்று யோசித்தேன், இது கனவா? நனவா? என்று. அழைப்பு வந்ததின் பேரில் நான் அங்கு சென்றபோது எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
நான் அவரிடம் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் தம்பி ஷங்கர் அவர்கள், “அண்ணே நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்“ என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.
அதேபோல், இன்னொரு தம்பி சிம்பு அவர்கள் என்னுடன் இப்படத்தில் நடிக்கிறார். எனக்கு இந்த படத்தின் மூலம் நிறைய தம்பிமார்கள் கிடைத்துள்ளார்கள். அதற்குமேல் எனக்கு உயிரினும் மேலான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவர் பேசும், ஒவ்வொரு நொடியும் தியேட்டரில் அவரது ரசிகர்களின் விசில் சத்தமும், கைதட்டலும் கேட்டுக் கொண்டே இருந்தது.
Comments
Post a Comment