10வது சென்னை சர்வதேச திரைப்பட விழா : டிச.13ஆம் தேதி தொடங்குகிறது!!

Monday,3rd of December 2012
சென்னை::ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெற்று வரும் 'சென்னை சர்வதேச திரைப்பட விழா' இந்த ஆண்டு 10வது ஆண்டாக வரும் டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற இருக்கிறது.

தமிழக அரசு மற்றும் திரைத்துறையின் ஆதரவோடு இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்தி வரும் இத்திரைப்பட விழாவில் இந்த ஆண்டு 57 நாடுகளைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படும். சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பெனி, ஐநாக்ஸ், சத்யம், ராணி சீதை ஹால், காசினோ ஆகிய இடங்களில் இத்திரைப்பட விழாவுக்கான திரைப்படங்கள் திரையிடப்படும்.

இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் படங்களுக்கான போட்டி பிரிவு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த 12 படங்களில் சிறந்த ஒரு படத்துக்கு பரிசு அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு போட்டிப் பிரிவில் தேர்வான தமிழ்ப் படங்கள் விபரம்:

அரவாண், அரோகணம், அட்ட கத்தி, மெரினா, மெளனகுரு, முப்பொழுதும் உன் கற்பனைகள், நான் ஈ, நீர்ப்பறவை, பீட்சா, சாட்டை, சுந்தர பாண்டியன், வழக்கு எண் 18/9.

இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்ததை கொண்டாடும் விதத்தில், சந்திரலேகா (தமிழ்), மேக சந்தேஷம் (தெலுங்கு), பதர் பாஞ்சாலி (பெங்காலி), கைடு (இந்தி), வீப்பா (கன்னடம்), வதுகாரா அல்லது தம்பு (மலையாளம்) ஆகியப்படங்கள் திரையிடப்படும்.

இளைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் தி இந்து நாளிதழ் ஆதரவோடு குறும்படப் போட்டி ஒன்றும் இத்திரைப்பட விழாவில் நடைபெறுகிறது.

டிசம்பர் 13ஆம் தேதி, உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெறும் துவக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும். அதேபோல டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் முடிவு விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கலந்துகொள்கிறார்

Comments