Monday,10th of December 2012
சென்னை::ரஜினி நடித்துள்ள சிவாஜி படம் 3டியில் டிச.12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏவி.எம். நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன் தயாரித்த படம் ‘சிவாஜி. இப்படம் 3டியில் மாற்றப்பட்டிருக்கிறது. ஷங்கர் இயக்க கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இப்படம் சமீபத்தில் ரஜினிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்து பாராட்டினார். படத்தின் விறுவிறுப்பை கூட்டும் வகையில் சுமார் 15 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ரஜினியின் ஸ்டைலான ஆக்ஷன் காட்சிகள் கண்களுக்கு அருகே வருவதுபோல் 3டியில் மாற்றப்பட்டிருக்கிறது.
பாடல் காட்சியில் ஆப்பிள் பழத்தை வீசும்போதும், துப்பாக்கியை தூக்கி வீசியதும் அது பறந்து வந்து வில்லனை சுடுவதும், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து தெறிப்பதும் என பல்வேறு காட்சிகள் கண்களுக்கு அருகே வருவதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி தயாரிப்பாளர் எம்.எஸ். குகன் கூறும்போது, ‘சிவாஜியை 3டியில் மாற்ற ஒரு வருட காலம் பிடித்தது. தமிழ்நாட்டில் 3டியில் ஏற்கனவே 65 தியேட்டர்கள் இருக்கிறது. கூடுதலாக 50 தியேட்டர்கள் 3டி தியேட்டர்களாக மாற்றப்பட்டுள்ளது. ரஜினி பிறந்தநாளான 121212 அன்று படம் ரிலீஸ் ஆகிறது என்றார். டைரக்டர்கள் எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், வைரமுத்து உள்ளிட்டவர்கள் படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment