ரஜினியை இயக்க அனுபவம் போதாது : ஐஸ்வர்யா பேட்டி!!!

Friday,23rd of November 2012
சென்னை::ஒரு படம் மட்டுமே இயக்கிய எனக்கு அப்பா ரஜினியை இயக்க அனுபவம் போதாது’ என்று மகள் ஐஸ்வர்யா கூறினார். தனுஷ் நடித்த ‘3’ படத்தை இயக்கியதுடன், செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஐஸ்வர்யா. இவர் கூறியதாவது: நான் ரஜினியின் மகளாக இருக்கலாம், தொழில் முறையில் அவர் நடிகர். எந்தவொரு படத்தில் நடிப்பதாக இருந்தாலும் முதலில் அவர் அதை ஏற்க வேண்டும். ‘ரஜினியை வைத்து படம் இயக்குகிறீர்களா?’ என்கிறார்கள். அவருடன் பணியாற்றுவதற்கு நான் இன்னும் தயாராகவில்லை. ஒரு படம்தான் இயக்கி இருக்கிறேன். வீட்டில் இருக்கிறார். கால்ஷீட் ப்ரியாக வைத்திருக்கிறார் என்பதால் அவர் என்னுடன் பணியாற்றுவார் என்று கூற முடியாது. சினிமாவை பொறுத்தவரை சிறந்தது எதுவென்றால் காத்திருப்பதுதான்.

அடுத்த படம் இயக்குவதற்கு அவசரப்படவில்லை. எனக்கு ஸ்கிரிப்ட்டில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே என் பணியை தொடங்க முடியும். என் தங்கை சவுந்தர்யா, அப்பா நடிப்பில் கோச்சடையான் இயக்குகிறார். அவரது கடின உழைப்பு எனக்கு தெரியும். ஆனால் படத்தில் ஒரு காட்சி கூட இன்னும் நான் பார்க்கவில்லை. ஜனவரியில் ரிலீஸ் ஆகும். என் கணவர் தனுஷ் தற்போது இந்தியில் ‘ராஞ்சா’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கான திறமை அவருக்கு இருக்கிறது. அதன் ஷூட்டிங் டில்லியில் நடந்தபோது நான் போயிருந்தேன். தென்னிந்தியாவிலிருந்து யாரையும் அவ்வளவு எளிதாக இந்தி படங்களில் ஏற்பதில்லை, ‘3’ படத்தை இயக்கியபோது இந்தியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டேன். விநியோகஸ்தர் யாரும் கிடைக்கவில்லை. சரியான வாய்ப்பு கிடைத்தால் இந்தியில் பணியாற்ற தயாராக இருக்கிறேன். இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்

Comments