நடிகையின் உறவினர்களுக்கு செலவு செய்ய மாட்டோம் : தயாரிப்பாளர்கள் போர்க்கொடி!!!

Thursday,15th of November 2012
சென்னை::நடிகைகளுடன் வரும் உறவினர்கள், பணியாளர்களுக்கான செலவை ஏற்க மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். நடிகர், நடிகைகள் உள்ளூர் மற்றும் வெளியூர் ஷூட்டிங் செல்லும்போது தங்களுக்கு உதவியாக உறவினர் மற்றும் பணியாளர்களை அழைத்துச் செல்கின்றனர். இவர்களுக்காக ஆகும் செலவை பட நிறுவனங்களே ஏற்க வேண்டி உள்ளது. அதை ஏற்க முடியாது என்று தயாரிப்பாளர்கள் ஏற்கனவே கூறி வந்தனர். தற்போது அந்த பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது. சமீபத்தில் ஒரு ஹீரோயின் தன்னுடன் அழைத்து வந்தவர்களுக்கான செலவை பட நிறுவனமே செய்ய வேண்டும் என்று கூறியதையடுத்து  அதற்கான செலவை நிறுவனம் செய்தது.

இதற்காக நடிகைகளின் சம்பளம்போக கூடுதலாக 10 லட்சம் வரை செலவானதாக கூறப்படுகிறது. இலியானா, அனுஷ்கா போன்றவர்களும் இதுபோன்ற செலவுகளை இழுத்துவிடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த செலவுகளை கட்டுப்படுத்துவது பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆலோசனை நடக்கிறது. ஆனால் சில நடிகர், நடிகைகள் இதில் விதிவிலக்காக உள்ளனர். இது பற்றி தமன்னா கூறும்போது,‘வீட்டில் இருக்கும்போது தினமும் நான் உடற்பயிற்சி செய்கிறேன். வெளிப்புற படப்பிடிப்புக்கு செல்லும்போதும் அதை தொடர்வதற்காக என்னுடைய பயிற்சியாளரை உடன் அழைத்துச் செல்கிறேன். அதேபோல் சமையல்காரரையும் அழைத்துச் செல்கிறேன். ஆனால் அவர்களுக்கான செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

Comments