Saturday,17th of November 2012
சென்னை::இந்தியாவிலுள்ள எல்லா இனத்தவர்களையும் நான் ஒன்றாகவே பார்க்கிறேன், எனக்கு ஜாதி, மத வேறுபாடு கிடையாது என்று நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளான நேற்று கூறினார். கமல்ஹாசன் எழுதி, தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி (நேற்று) சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கமல் தன் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறினார். மேலும், அதிநவீன தொழில்நுட்பமான ஆர்ஓ 3-டி மூலம் உருவாகியுள்ள விஸ்வரூபம் டிரைலர் வெளியிடப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:- எனது பிறந்தநாளில் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் உருவாகியுள்ள ஆர்ஓ 3-டி, ட்ரைலர் வெளியிடப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். இன்று 10.30 மணிக்கு 25 ஊர்களில் ஆர்ஓ 3-டியை பார்க்கும் வசதியுள்ள திரையரங்குகளில் இதே நேரத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் பார்த்து ரசித்திருப்பார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். விஸ்வரூபம் திரைப்படம் யு/ஏ சான்று வாங்கியிருக்கிறது. இந்தி மொழியிலும் இப்படம் தயாராகிறது. அதனால் தமிழில் ரிலிஸ் ஆகும்போது இந்தியிலும் வெளியாகும். சுமார் 30 ஆயிரம் பிரிண்ட் போட திட்டமிட்டு இருக்கிறேன். இந்த படம் தீவிரவாதம் பற்றிய படம் அல்ல. அதே நேரத்தில் எந்த மதத்தையும் இழிவுப்படுத்தவும் இல்லை. அது எனது படங்களில் எப்போதும் இருக்காது. இந்தியாவிலுள்ள எல்லா இனத்தவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். எனக்கு ஜாதி மத வேறுபாடு கிடையாது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று பிரித்து பார்ப்பதில்லை. எனக்கு எந்த பண்டிகையும், கிடையாது. விஸ்வரூபத்தை பொறுத்தவரை என்னோட கண்ணோட்டத்தில் பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்வதே என் நோக்கம். இந்த படத்தை குழந்தைகள் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்
Comments
Post a Comment