பிரசவ காட்சியில் நடித்த நடிகை ஸ்வேதாமேனன் மீது கேரள கோர்ட்டில் வழக்கு!

Friday,23rd of November 2012
சென்னை::திருவனந்தபுரம்::சினிமாவுக்காக பிரசவத்தை படம் பிடிக்க அனுமதித்த பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் அவரது கணவர் ஸ்ரீவல்சன் மற்றும் படத்தின் டைரக்டர், கேமராமேன்கள் ஆகியோருக்கு எதிராக எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்வேதாமேனன். இவர் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ என்ற படத்தில் நடித்தற்காக கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. சில வருடங்களுக்கு முன் ‘காமசூத்ரா’ ஆணுறைக்கான விளம்பரத்தில் இவர் நிர்வாணமாக நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மலையாளத்தில் பிரபல டைரக்டரான பிலேஸ்சி இயக்கிய ‘களிமண்’ என்ற படத்தில் ஸ்வேதாமேனன் கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கிடையே கடந்த வருடம் நடிகை ஸ்வேதாமேனனுக்கும், பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீவல்சனுக்கும் காதல் திருமணம் நடந்தது. ஸ்வேதாமேனன் கர்ப்பிணியானார். டைரக்டர் பிலேஸ்சி தனது படத்தில் ஸ்வேதாமேனனின் கதாபாத்திரத்தை கர்ப்பிணியாக நடிக்க வைத்தார். இதற்காக அவரது பிரசவ காட்சிகளையும் அந்த படத்திற்காக படம் பிடித்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படம் அடுத்தாண்டு வெளிவரவுள்ளது.

இந்நிலையில் சினிமாவிற்காக பிரசவ காட்சியை படம் பிடித்ததை எதிர்த்து எர்ணாகுளம் கலமசேரி பகுதியை சேர்ந்த பவுலோஸ் என்பவர் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். அதில் நடிகை ஸ்வேதாமேனனின் பிரசவ காட்சிகள் சினிமாவிற்காக படம் பிடிக்கப்பட்டதின் மூலம் பெண்மையை இழிவுப்படுத்தியுள்ளார். இந்த செயல் பொதுசமூகத்தை அவமானப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. எனவே இந்த காட்சியில் நடித்த நடிகை ஸ்வேதாமேனன், அவரது கணவர் ஸ்ரீவல்சன், டைரக்டர் பிலேஸ்சி மற்றும் கேமராமேன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் டிசம்பர் 5ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தது.

Comments