Friday,23rd of November 2012
சென்னை::மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த பார்வதியை, பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார் டைரக்டர் சசி. முதல்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அதன்பிறகு எந்த படங்களும் அவருக்கு தமிழில் அமையவில்லை. இதனால் மீண்டும் மலையாளத்துக்கு போனார். இப்போது தனுஷூக்கு ஜோடியாக "மரியான்" படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் பார்வதி. அவரின் சிறப்பு பேட்டி:
* பூ படத்திற்கு பிறகு இவ்வளவு பெரிய இடைவெளி ஏன்?
பூ படத்தில் கிராமத்து அப்பாவி பெண்ணாக நடித்தேன். அதன் பிறகும் அதே மாதிரியான கேரக்டர்கள் வந்தது. ஒரே மாதிரியாக நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் அவற்றை தவிர்த்தேன். இதற்கிடையில் மலையாளம், கன்னடம் படங்களில் பிசியாகி விட்டதால் அங்கேயே தங்கி விட்டேன்.
* இடையில் தமிழ் மீடியாக்களிடம் பேசவே தயங்கினீர்களே?
நான் தமிழ் படத்திலேயே நடிக்காதபோது தமிழ் மீடியாக்களிடம் பேச என்னிடம் என்ன இருக்கிறது. எனக்கு பிடித்த நிறம் சிவப்பு, பிடித்த ஹீரோ இவர், என் அழகின் ரகசியம் இது என்று பேட்டி கொடுக்க எப்போதும் நான் விரும்புவது இல்லை. இப்போது மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறேன். அதனால் உங்களுடன் பேசுகிறேன்.
* சரி மரியான் படத்தில் தனுஷ் ஜோடி... எப்படி உணர்கிறீர்கள்?
தனுஷ் படங்கள் பார்த்திருக்கிறேன். அற்புதமான நடிகர். அவருடன் நடிப்பது எனக்கு சவாலாக இருக்கும். இன்னும் என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்.
* மரியான் படத்தில் என்ன கேரக்டர்?
தயவு செய்து அதைப்பற்றி மட்டும் கேட்காதீர்கள். படத்தைப் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்பது இயக்குனரின் அன்புக் கட்டளை. அதற்கு மேலும் படம் பற்றியோ என்னுடைய கேரக்டர் பற்றியோ தெரிந்து கொள்ள வேண்டுமானால் இயக்குனரைத்தான் கேட்க வேண்டும்.
* "சென்னையில் ஒரு நாள்" படத்திலும் நடிக்கிறீர்களே?
"டிராபிக்" மலையாளத்தில் வந்தபோது இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என்று வருந்தினேன். அதை ஒரு பேட்டியிலும் சொல்லியிருந்தேன். அதை மனதில் வைத்துக் கொண்டு தமிழில் ரீமேக் செய்யும்போது சரத்குமார் சார் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார். நானும் சந்தோஷமாக நடித்து வருகிறேன்.
* ஒரு படத்தில் நடிப்பதற்கு நிறைய நிபந்தனைகள் விதிக்கிறீர்களாமே?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எத்தனை பெரிய படம், இயக்குனராக இருந்தாலும் கதை என்ன? அதில் என் கேரக்டர் என்ன? என் திறமையை வெளிப்படுத்த போதிய இடம் இருக்கிறதா? என்று பார்ப்பேன். அதனால் அதுகுறித்து கேள்வி கேட்பேன். அது சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள்தான் நான் நிபந்தனை விதிப்பதாக சொல்கிறார்கள்.
* மோஸ்ட் வாண்டட் நடிகையாக இருக்கிறீர்கள். அப்படி இருந்தும் அதிக படங்களில் நடிக்கவில்லையே?
எதற்காக நடிக்க வேண்டும். இத்தனை படத்தில் நடித்திருக்கிறேன். இத்தனை கோடி சம்பாதித்து இருக்கிறேன். என்று பட்டியலிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் நடிக்கும் படங்கள் பேசும் படி இருக்க வேண்டும். அதைத்தான் விரும்புகிறேன். வருடத்துக்கு ஒரு படம் நடித்தாலும் போதும். அது நல்ல படமாக இருக்க வேண்டும். ஒரு வேளை அப்படி படம் கிடைக்காவிட்டால் என் வீட்டுக்கு பின்னால் பெரிய தோட்டம் இருக்கிறது. அதில் வேலை பார்த்து பிழைத்துக் கொள்வேன்.
* தமிழ் ரசிகர்கள் பற்றி...?
நான் தமிழ் ரசிகர்களைப் பார்த்து பயப்படுகிறேன். காரணம் அவர்கள் ரொம்பவே சார்ப்பானவர்கள். பூ போன்ற படத்தையும் கொண்டாடுகிறார்கள். துப்பாக்கி படத்தையும் தூக்கி பிடிக்கிறார்கள். சிறிய படம், பெரிய நடிகர் படம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. படத்தில் விஷயம் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். தமிழ் படத்தை நான் தேர்ந்தெடுத்து நடிப்பது அதனால்தான். மரியான் படத்துக்கு பிறகு என்னை அடிக்கடி தமிழ் படத்தில் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment