போடா போடி திரை விமர்சனம்!!!

Friday,16th of November 2012
சென்னை::காதல் தொடங்கி கல்யாணம் வரை ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனை தான் இப்படத்தின் கதை. அதை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் புதுமுக இயக்குநர் விக்னேஷ் சிவன்.

லண்டனின் அனிமேஷன் டிசைனராக பணியாற்றும் சிம்புவுக்கும், அதே லண்டனின் சல்சா நடன கலைஞராக இருக்கும் வரு சரத்குமாருக்கும் காதல் ஏற்படுகிறது. வருவின் சல்சா நடனமும், அதனால் அவர் பல ஆண்களுடன் கட்டிப்பிடித்து நடனம் ஆடும் முறையும் சிம்புவுக்கு கடுப்பை கலப்ப, அந்த நடனத்தை விட்டுவிடு என்று வருவிடம் கூறுகிறார். நடனம் தான் என் வாழ்க்கை அதை விட முடியாது என்கிறார் வரு. இதனால் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட, அந்த பிரிவே இவர்களுடைய காதலை இன்னும் பலமாக்குகிறது.

காதலித்தால் தான் இப்படி சண்டை வருகிறது திருமணம் செய்துகொண்டால் என்ன? என்று யோசிக்கும் சிம்பு, வருவை திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்திற்குப் பிறகும் நடனத்தை விட முடியாது என்று பிடிவாதம் பிடிக்கும் வருவுக்கு, ஒரு குழந்தை பிறந்தாள், பிறகு நடனம் ஆடுவதை விட்டுவிடுவார் என்று சிம்புவின் சித்தப்பாவான வி.டி.வி. கணேஷ் ஐடியோ சொல்ல, அதை செயல்படுத்தும் சிம்பு-வரு ஜோடிக்கு அழகான ஆண் குழந்தைப் பிறக்கிறது.

குழந்தைப் பிறந்த பிறகும் நடனத்தை விட முடியாது என்று சொல்லும் வருவுக்கும், சிம்புவுக்கும் இடையே நடக்கும் சண்டையின் போது விபத்து ஏற்பட்டு குழந்தை இறந்துவிடுகிறது. மீண்டும் பிரியும் இவர்கள் மறுபடியும் ஒன்று சேர்ந்தார்களா? வரு நடனத்தை விட்டாரா? அல்லது சிம்பு மனம் மாறினாரா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

விரல் வித்தை, வாய் வித்தை என இரண்டையும் தவிர்த்து அடக்கமாக சிம்பு இப்படத்தில் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு எது தேவையோ அதில் மட்டும் சிம்பு கவனம் செலுத்தியிருக்கிறார் (இந்த ஒரு விஷயத்துக்காகவே இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்)

முதல் படத்திலேயே வருவுக்கு வெயிட்டான வேடம். அதை மிகச் சரியாக செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்குகிறார். சல்சா நடன கலைஞரான வரலட்சுமியின், உடல் எடையைப் பார்த்தால் ஏதோ மல்யுத்த வீரங்கனைப் போல இருக்கிறார். அவருடைய குரலும் அதேபோல கம்பீரமாக இருக்கிறது. இருப்பினும் அவருடைய நடிப்பும், அவர் ஆடும் சல்சா நடனமும் அவரிடம் உள்ள இந்த குறைகளை மறைத்திருக்கிறது.

வி.டி.வி.கணேஷ் வரும் காட்சிகளில் திரையரங்கமே கலகலப்பாகிறது. ஷோபானாவுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், காட்சிகளில் நிறைந்திருக்கிறார்.

டக்கன் டெல்போர்ட் என்ற ஹாலிவுட் ஒளிப்பதிவாளரின் ஒளிப்பதிவு அசத்தல். பாடல் காட்சிகளை படமாக்கிய விதமும், செட் அமைத்த விதமும் பிரமாண்டமாக உள்ளது. தரணின் இசையில் பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை.

வித்தியாசமான முறையில் இயக்குநர் திரைக்கதை அமைத்திருந்தாலும் படத்தில் ஏதோ ஒன்று குறைவதுபோலதான் இருக்கிறது. சிம்பு, வரலட்சுமி இவர்கள் இருவரை சுற்றியே முழுப்படமும் நகர்வதால் பல இடங்களில் சலிப்பு அடையவைப்பத்தை ஏற்றுகொள்ளதான் வேண்டும். அதே சமயம் படத்தின் இரண்டாம் பாதியில் குழந்தைப் பிறந்தவுடன் சிம்புவுக்கும், வரலட்சுமிக்கும் இடையே ஏற்படும் சண்டை, நடனப் போட்டியில் வரலட்சுமியும் சிம்பும் கலந்துகொண்டப் பிறகு நடக்கும் சம்பவங்கள் போன்றவை படத்திற்கு சிறிது பலம் சேர்த்திருக்கிறது.

இந்த படத்தில் சிம்புவுக்கு எப்படி லவ் பண்ணலாமா? வேண்டாமா? என்ற ஒரு குழப்பம் வருகிறதோ அதைப்போலவே படத்தின் முதல் பாதியில் நமக்கு இந்த படத்தை தொடர்ந்து பார்க்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் வருகிறது. சரி என்று மனதை தேற்றிக்கொண்டு படத்தைப் பார்க்கும் போது, இரண்டாம் பாதி ஆறுதலாக இருக்கிறது.

புதுமுக இயக்குநர் விக்னேஷ் சிவனின் புதிய முயற்சிக்காகவும், சிம்புவின் அடக்கமான நடிப்புக்காகவும், வரலட்சுமியின் அசத்தலான அறிமுகத்துக்காகவும் 'போடா போடி' படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

ஜெ.சுகுமார்

Comments