Wednesday,28th of November 2012
சென்னை::சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் திரையரங்கில் காரை உடைத்து, சிறப்பு எஸ்.ஐ. மற்றும் காவலர் தாக்கப்பட்ட வழக்கில் தமிழ் திரைப்பட நடிகையும், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளருமான புவனேஸ்வரி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை சேலையூரைச் சேர்ந்த குமார் தனது குடும்பத்தினருடன் ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு திறந்தவெளி திரையரங்குக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை துப்பாக்கி திரைப்படம் பார்க்கச் சென்றார். குமார் அங்கு தனது காரை, கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தச் சென்றாராம்.
அப்போது தாமோதர கிருஷ்ணனும், அவருடன் வந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகையும், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலருமான புவனேஸ்வரியும் (35), குமாரிடம் தகராறு செய்தாராம். தகராறு முற்றவே குமார், கிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்த கிருஷ்ணன் செல்போன் மூலம் தனது நண்பர்களை அங்கு அழைத்தார்.
சிறிது நேரத்தில் கிருஷ்ணனுடைய நண்பர்கள் திரையரங்குக்கு வந்து தகராறு செய்ததாக தெரிகிறது. தகராறு முற்றவே அவர்கள், திரையரங்கு காவலாளி செல்வராஜை தாக்கினராம். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த குமாரின் காரை உடைத்தனர்.
மேலும் திரையரங்கில் உள்ள பொருள்களையும் அந்த கும்பல் தாக்கி உடைத்ததாம்.
இதைப் பார்த்த திரையரங்கு ஊழியர்கள், நீலாங்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த நீலாங்கரை காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, காவலர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று அந்த கும்பலை பிடிக்க முயன்றனராம். அப்போது அந்த கும்பல் கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கரையும் தாக்கியதாம். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
வேலூர் அருகே கைது: இது குறித்து நீலாங்கரை போலீஸôர், நடிகை புவனேஸ்வரி, தாமோதர கிருஷ்ணன், விக்னேஷ் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் போலீஸôர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணன், சாலிகிராமம் காந்தி தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (24), விருகம்பாக்கம் அன்னை இந்திராநகரைச் சேர்ந்த கவின்ராஜ் (22), பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மணி (24), பாரதிநகரைச் சேர்ந்த கோபி (23), நெசப்பாக்கம் பர்மா காலனியைச் சேர்ந்த சங்கர் (30) ஆகிய 6 பேரையும் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த நடிகை புவனேஸ்வரியை வாகன சோதனையின்போது போலீஸôர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி மாலையில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸôர் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
Comments
Post a Comment