ஆர்மர் ஆப் காட்3’தான் என் கடைசி ஆக்ஷன் படம் : ஜாக்கிசான் பேட்டி!

Wednesday,21st of November 2012
ஹாங்காங்::ஆர்மர் ஆப் காட் படத்தின் 3வது பாகமாக டிசம்பரில் வெளியாக உள்ள ‘சைனீஸ் சோடியாக்’ படம்தான் தனது கடைசி ஆக்ஷன் படம் என்று ஜாக்கிசான் கூறினார். தனது காமெடி கலந்த ஆக்ஷன் காட்சிகளால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை வசப்படுத்தியவர் ஹாங்காங் நடிகர் ஜாக்கி சான். 1960களில் இருந்து நடித்து வரும் அவர் 150க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஃபிஸ்ட் ஆப் பியூரி, என்டர் தி டிராகன், போலீஸ் ஸ்டோரி, தண்டர் போல்ட், ஹூ ஆம் ஐ, ஷாங்காய் நூன் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. 1987ல் ஆர்மர் ஆப் காட் வந்தது.


இதன் 2வது பகுதியாக 1991ல் ஆபரேஷன் காண்டர் வந்தது. 3வது பகுதியாக ஜாக்கி சான் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் ‘சைனீஸ் சோடியாக் 2012’ படம் வரும் டிசம்பரில் ரிலீசாக உள்ளது. இது பற்றி ஜாக்கி சான் நேற்று கூறியதாவது: எனக்கு 58 வயதாகிறது. இனிமேல் கை, கால்களை தூக்கி ஆக்ஷன் செய்வது பொருத்தமாக இருக்காது என நினைக்கிறேன். அப்படி செய்வது கடினமாகவும் இருக்கிறது. உலகம் முழுவதும் வன்முறை, அடிதடிகள் நடக்கிறது. சினிமாவிலும் எதற்காக அடிதடிகள்.

அனேகமாக, டிசம்பரில் வெளிவரும் சைனீஸ் சோடியாக் படம்தான் எனது கடைசி ஆக்ஷன் படமாக இருக்கும். மாறுபட்ட கதாபாத்திரங்களில், நல்ல நடிகனாக தொடர்ந்து என்னை திரையில் பார்க்கலாம். இவ்வாறு ஜாக்கி சான் கூறினார். தன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஜாக்கி சான் நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார். அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த நிகழ்ச்சியில் அவரது பென்ட்லி 666 கார் ஏலம் விடப்பட்டது. அது ரூ.5.30 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

Comments