Saturday, 6th of October 2012
சென்னை::இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் படங்கள் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அப்படி பல பிரச்சனைகளைத் தாண்டி, வெளிவந்த ‘தாண்டவம்’ ரசிகர்களிடையே 'சுமார்' என்ற அளவிலான வரவேற்பையே பெற்றுள்ளது. “என் ஒவ்வொரு படத்திலும் நான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். அந்த அனுபவங்கள் தான் என்னை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றன” என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது “பல பிரச்சனைகளைத் தாண்டி தாண்டவம் படம் வெளியானது. துணை இயக்குனர் பொன்னுசாமி UTV-யிடம் ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தார். என் படத்தையும் UTV எடுத்ததால் பொன்னுசாமிக்கு சந்தேகம் வந்துவிட்டது. அது நியாயமான சந்தேகம் தான் அவரை யாரும் குறை சொல்ல முடியாது. அதனால் என் ஸ்கிரிப்டை அவரிடம் கொடுத்து படிக்கச் சொல்லி, என் படத்தையும் அவருக்கு திரையிட்டு காட்டினேன். மேலும் சில பிரச்சனைகள் வந்ததால் அவர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றத்திலும் சில விளக்கங்களை கொடுத்தபின், இப்போது பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது.
நான் பொன்னுசாமி இயக்கும், படத்தை தயாரிக்கிறேன் என்றோ, பணம் தருகிறேன் என்றோ வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. உண்மையிலேயே அவர் திரைக்கதை நன்றாக இருக்கிறது. அவர் கண்டிப்பாக அதை படமாக எடுப்பார்.
இப்போது நான் நடிகர் விஜய்யை இயக்கும் படத்தின் டிஷ்கஷனில் பிஸியாக இருக்கிறேன். விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அறிந்து அதை என்னால் பூர்த்தி செய்ய முடியும். ஏனென்றால் நானும் அவரது ரசிகன் தான். காதலுக்கு மரியாதை போன்ற படங்களிலெல்லாம் நான் அவரை அவ்வளவு ரசித்துள்ளேன். விஜய்யை வைத்து படம் இயக்குவது ரஜினியை வைத்து படம் இயக்குவதைப் போன்ற உணர்வு எனக்கு. ஏனென்றல் ரஜினி அளவிற்கு விஜய்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த படம் ஒரு ரஜினி படம் மாதிரி இருக்கும்.
படம் பண்ணலாம் என ஒப்புக்கொண்டதிலிருந்து விஜய் இதுவரை என்னிடம் ஒன்றே ஒன்று தான் கூறியிருக்கிறார். ‘உங்கள நம்பி படத்துல நடிக்கிறேன். நீங்க தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்” என்பது தான் அது. அவர் என் மேல் வைத்துள்ள நம்பிக்கையை நான் கப்பாற்றுவேன். இந்த படத்தில் சந்தானம், நாசர் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான தலைப்பு இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜய் படத்திற்கு ஏற்றது போல தலைப்பு வைக்க வேண்டும் என காத்திருக்கிறோம்” என்று கூறினார்.
விஜய் நடிப்பில் விஜய் இயக்கும் இந்த படத்திற்கு முதலில் தலைவன் என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்று திரைவட்டாரத்தில் பேசப்படுகிறது.
Comments
Post a Comment