நடிகர்கள் ஆர்யாவும், மாதவனும் பிடிக்கும்: ரேவதி!!!

Thursday,25th of October 2012
சென்னை::தென்னிந்திய திரை தேவதைகள் நிகழ்ச்சியில் ரேவதி, சுகாசினி, பானுப்பிரியா உள்ளிட்ட நூற்றுக்கான திரைப்பட நடிகைகள் பங்கேற்று தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நடிகர்கள் ஆர்யாவும், மாதவனும் இந்த தேவதைகள் ஒவ்வொருவரையும் அழகாய் வரவேற்று அவர்களின் அனுபவங்களை கேட்டது சுவாரஸ்யமாக அமைந்திருந்தது.
ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் எல்லோரும் சினிமாவில் மூழ்கியிருக்க ஜெயாடிவியில் தென்னிந்திய திரை தேவதைகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பெயருக்கு ஏற்றார்போல திரைப்பட நட்சத்திரங்கள் குவிந்திருந்த இந்த நிகழ்ச்சியை நடிகர்கள் ஆர்யா, மாதவன் தொகுத்து வழங்கினர்.

ரேவதி, சுகாசினி, பானுப்பிரியா, ராதா, உள்ளிட்ட 1980,1990களில் நடித்த நூற்றுக்கணக்கான திரைநட்சத்திரங்களுடன் தற்போதைய நடிகைகளும் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்
இயக்குநர் கே.பாலசந்தர் நடிகை ரேவதிக்கு பரிசுகளை வழங்கி பாரட்டினார். பின்னர் வழக்கம் போல மாதவன், ஆர்யாவின் கேள்விக்கணை தொடங்கியது. இப்போதைய சூழ்நிலையில் நீங்கள் ஹீரோயினாக நடித்தால் யாரை ஹீரோவாக தேர்வு செய்வீர்கள் என்று இருவரும் கேட்டனர்.

அதற்கு சிரித்த ரேவதி, இந்தப்பக்கம் மாதவன், இந்தப்பக்கம் ஆர்யா என்று கூறி இருவரையும் ஹீரோவாகத் தேர்ந்தெடுப்பேன் என்று கூறி கலகலப்பூட்டினார். பானுப்பிரியாவைப் பற்றிய நினைவுகளை ரேவதி மேடையில் பகிர்ந்து கொண்டபோது கீழே அமர்ந்திருந்த பானுப்பிரியாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது.
இதேபோல் மேடையேறிய ராதவையும் சகட்டுமேனிக்கு கேள்வி கேட்டனர் ஆர்யாவும் மாதவனும். எந்த ஹீரோ உங்களுக்குப் பிடிக்கும் என்ற கேட்டபோது சற்றும் யோசிக்காத ராதா, தனக்கு கார்த்திக்கின் மகன் கவுதம்தான் பிடித்த ஹீரோ என்று கூறி ஒரே போடாக போட்டார்.
நூற்றுக்கணக்கான திரைப்பட நாயகிகளை ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. திரைதேவதைகள் பங்கேற்ற நிகழ்ச்சியை ஆர்யாவும்,மாதவனும் கலகலப்பாக தொகுத்து வழங்கியது நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பாக அமைந்திருந்தது.

Comments