பொங்கலுக்கு தள்ளிப்போகிறது ரஜினி படம்!!!

Tuesday, 16th of October 2012
சென்னை::ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் டிசம்பருக்கு பதிலாக பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த். அப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்று திரும்பினார். ராணா படத்தில் ரிஸ்க்கான ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறுவதால் ரஜினியின் உடல் நிலை காரணமாக அந்த படம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடிக்க தொடங்கினார் ரஜினி. இதில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஆதி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் காரணமாக டிசம்பரில் திரையிட திட்டமிட்டனர். இந்நிலையில் பட ஷூட்டிங் முடிந்தாலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதமாகும் என தெரிகிறது. காரணம், படத்தின் பெரும்பாலான காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்சில் உருவாக்கப்படுகிறது. அதே நேரம் அந்த காட்சிகள் கிராபிக்ஸ் போல் தெரியக்கூடாது என சவுந்தர்யா நினைக்கிறார். இதனால் குறிப்பிட்ட சில காட்சிகளுக்கான கிராபிக்ஸ் பணிகள் லண்டனில் நடைபெற உள்ளது. இதன¢ காரணமாக படத்தை டிசம்பரில் திரையிட முடியாது என பட வட்டாரங்கள் கூறுகின்றன. படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழாவை ஜப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவே டிசம்பரில்தான் நடைபெறும் என கூறப்படுகிறது. இதையடுத்து படத்தை 2013 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய சவுந்தர்யா யோசித்துள்ளாராம்.

Comments