சிவா நடிக்கும் 'சொன்னா புரியாது'!!!

Tuesday,23rd of October 2012
சென்னை::'தமிழ்ப் படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதனிடம் இணை இயக்குநராக பணியாற்றி கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் படம் 'சொன்னா புரியாது'. முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக சிவாவும், ஹீரோயினாக வசுந்தரா காஷ்யப்பும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் மனோ பாலா, பிளேடு ஷங்கர், மீரா கிருஷ்ணன், சிங்கமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, அல்வா வாசு, ஆர்த்தி, ஆதிஷ், காதல் சரவணன், புதுமுகம் பிரதீப் ஆகியோர் நடிக்கிறார்கள்.

திருமணம் என்றாலே தவிர்த்து வருபவர் சிவா. அவருக்கு திருமணம் என்கிற சடங்கு மீது பயம். திருமணம் தவறானது, அது ஆண்களின் சுதந்திரத்தையும், நிம்மதியையும் பறிப்பது என்று எண்ணும் சிவா, திருமணம் என்ற பேச்சு எடுத்தாலே விலகி ஓடும் சுபாவம் கொண்டவர். அப்படிபட்டவருக்கு சூழ்நிலை திருமணம் செய்துகொள்ளுமாறு துரத்துகிறது. இப்படி ஒவ்வொரு முறையும் தனக்கு ஏற்பாடு செய்யப்படும் திருமணத்தில் இருந்து சிவா எப்படி விலகுகிறார். இறுதியில் அவருக்கு திருமணம் நடந்ததா இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்தைப் பற்றி கூறிய இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ், "குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும்படியாக இப்படம் இருக்கும். ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கும் காட்சிகள் உண்டு. அதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்." என்றார்.

இப்படத்தில் சிவா மொழி மாற்றுப் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

350 டிகிரிஸ் பிலிம் கார்ப் தயாரிக்கும் இப்படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். யதீஷ் மகாதேவ் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவடைந்துள்ள நிலையில், படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Comments