கன்னட டி.வி. நடிகை அடித்து கொலை: கணவர் கைது!!!

Thursday,11th of October 2012
பெங்களுர்::கன்னட டி.வி. நடிகை ஹேமாஸ்ரீ (வயது33). இவர் நிறைய தொடர்களில் நடித்துள்ளார். ஹேமாஸ்ரீக்கும், சுரேந்திர பாபு என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சுரேந்திர பாபுவுக்கு ஹேமாஸ்ரீயை விட அதிக வயது. அவரை மணந்து கொள்ள ஹேமாஸ்ரீ முதலில் சம்மதிக்கவில்லை.

பெற்றோர் கட்டாயப்படுத்தி திருப்பதிக்கு அழைத்து போய் திருமணத்தை முடித்து விட்டனர். திருமணத்துக்கு பின் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர்.

சுரேந்திரபாபு வயதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டார் என்றும் அவரோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும் உல்சூர் போலீசில் ஹேமாஸ்ரீ ஏற்கனவே புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுரேந்திர பாபுவும் ஹேமாஸ்ரீயும் ஆந்திர மாநிலம் அனந்தபூருக்கு சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்து இருவரும் காரில் பெங்களூர் திரும்பினார்கள். அப்போது காரிலேயே ஹேமாஸ்ரீ மர்மமான முறையில் இறந்தார். உடல் நிலை சரி இல்லாமல் அவர் இறந்து விட்டதாக சுரேந்திர பாபு தெரிவித்தார். ஆனால் ஹேமாஸ்ரீயின் தந்தை தனது மகளை சுரேந்திரபாபு கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஹேமாஸ்ரீ உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடலில் நிறைய காயங்கள் இருப்பதாக கூறினர். அடித்து உதைத்ததால் இந்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். விஷம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் பரிசோதிக்கிறார்கள்.

இதையடுத்து சுரேந்திர பாபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இறந்து போன ஹேமாஸ்ரீ 'சிரிவந்தா' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு டி.வி. தொடர்களில் நடித்தார். 2008-ல் நடந்த சட்ட சபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
27-7-12_findyour_INNER_468x60.gif

Comments