Monday,1st of October 2012
சென்னை::சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, இரு வேடங்களில் நடித்திருக்கும் படம், 'மாற்றான்'. இந்த படத்தை கே.வி.ஆனந்த் டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து இருக்கிறது. 'மாற்றான்' படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்துகொண்டு நிருபர்கள் மத்தியில் சூர்யா பேசினார். அவர் கூறியதாவது: நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் மிக கவனமாக எடுக்க வேண்டிய காலகட்டம் இது. ஒவ்வொரு முடிவும் சரியாக இருக்கிறதா? என பலமுறை யோசித்து, மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறேன். அப்படி மிக கவனமாக எடுத்த முடிவுதான், 'மாற்றான்'. இந்த படத்துக்காக, ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். ஒன்றரை வருடமும் 'மாற்றான்' படத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக்கொண்டேன். ஒட்டிப்பிறந்த சகோதரர்களை பற்றிய கதை மட்டுமல்ல. அப்பா-மகன் பாசம் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த கரு இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. ஆங்கில படமோ அல்லது வேறு எந்த படத்தின் நகலும் அல்ல. 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை. இதில், அகில்-விமல் என்ற 2 சகோதரர்களாக நடித்து இருக்கிறேன். இவ்வாறு சூர்யா கூறினார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சூர்யா அளித்த பதில்களும் வருமாறு: கேள்வி: 'மாற்றான்' படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்து சாதனை புரிந்து இருக்கிறீர்கள். அடுத்த சாதனை எது? பதில்: இது, ஒரு முதல் முயற்சி. இதில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இதை சாதனை என்று சொல்ல மாட்டேன். ஒரு புதிய முயற்சி என்று சொல்லிக்கொள்ளலாம். கேள்வி: இரட்டையர்களாக நடித்ததால், இரண்டு சம்பளம் வாங்கினீர்களா? பதில் (சிரித்தபடி): ஒரே சம்பளம்தான் வாங்கினேன். மேற்கண்டவாறு சூர்யா பதில் அளித்தார். டைரக்டர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சவுந்தர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன், எழுத்தாளர்கள் சுபா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக் குமார், விவேகா, தாமரை, ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள். 1 1
Comments
Post a Comment