மும்பையில் பயங்கரம் : ‘மிஸ் சென்னை’ அழகி குத்தி கொலை!!!

Wednesday,24th of October 2012
சென்னை::மும்பை::நடிகையும் முன்னாள் மிஸ் சென்னை அழகியுமான பிதுஷி, மும்பையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் உள்ளவர்களுக்கு இந்த கொலையில் சம்பந்தம் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த ‘மிஸ் சென்னை’ அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் பிதுஷி தாஷ் பர்தே (23). ஒடிசாவில் பிறந்த இவர் சென்னையில் படித்து வளர்ந்தவர். மாடலிங் செய்து வந்தார். விளம்பர படங்களிலும், சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கேதார் என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, மும்பையில் செட்டிலானார்.

இருவரும் மும்பை அந்தேரியில் உள்ள மணீஷ் கார்டன் பில்டிங்கில் உள்ள பிளாட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வேலை முடிந்து கேதார் வீட்டுக்கு வந்தார். காலிங் பெல்லை அழுத்தினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கே தரையில் ரத்த வெள்ளத்தில் பிதுஷி சலனமற்று கிடந்தார். அவர் அருகே கண்ணாடி ஷோகேஸ் விழுந்து நொறுங்கி கிடந்தது. கண்ணாடி துண்டுகள் அவர் மீது சரமாரியாக குத்தி இருந்தன. உடனே பிதுஷியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கே பரிசோதித்தபோது, பிதுஷி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசுக்கு கேதார் தகவல் தெரிவித்தார். அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிதுஷி தலையில் ஆழமான வெட்டுக் காயம் இருப்பதும், முகம், கழுத்து பகுதியில் நகக்கீறல்கள் இருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஆபீஸ் சென்றதுமே மனைவி பிதுஷிக்கு போன் செய்திருக்கிறார் கேதார். ஆனால், அவர் எடுக்கவில்லை. தொடர்ந்து பலமுறை முயற்சித்தும், செல்போனை அவர் எடுக்கவில்லை என கேதார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பில்டிங் வாட்ச்மேனிடம் போலீசார் விசாரித்தனர்.

பிதுஷியின் பிளாட்டுக்கு காலையில் ஒருவரும் பிற்பகலில் ஒருவரும் வந்து சென்றதாகவும் அவர்கள் யாரென்று தெரியவில்லை எனவும் வாட்ச்மேன் கூறினார். மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிதுஷி செல்போன் மூலமும் துப்பு துலக்கி வருகின்றனர். செல்போனில் பதிவான மெசேஜ்களை ஆய்வு செய்தனர். சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகளிடம் இருந்தே பெரும்பாலான மெசேஜ்கள் வந்திருந்தது தெரியவந்தது. சினிமா துறையில் பிதுஷியை நன்கு தெரிந்த ஒருவர்தான் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments