சென்னை:: பீட்சா! படத்தின் டைட்டிலே பலபேருக்கு ஆச்சரியத்தையும் ஒரு விதமான அன்னியத்தையும் அளித்தது. பீட்சா எப்படி இருக்கும் என்று ருசித்து பார்க்காத பலபேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். பீட்சா சாப்பிட வாய்ப்பிருந்தாலுமே அதை ஒதுக்கி வைக்கிறவர்களும் இருக்கிறார்கள். சொல்ல வருவது என்னவென்றால்... அப்படிப்பட்டவர்களுக்கும் இந்த படம் பிடிக்கும்! இளசுகள் ‘என்சாய்’ பண்ண ஒரு சூப்பர் படம்.
லிவிங் டூ கெதர் என்று சொல்லி திருமணதிற்கு முன்பே சேர்ந்து வாழும் நவீன யுகத்துத் தம்பதிகள் விஜய் சேதுபதி (மைக்கேல்) - ரம்யா நம்பேசன் (அனு). பிட்சா விநியோகிக்கும் நபராக விஜய் சேதுபதி. காதலி வயிற்றில் தன் குழந்தை இருப்பது தெரியவர, காதலியை மணக்கிறார்.
மனைவி ரம்யா நம்பேசன் ஒரு நாவல் எழுதுவதற்காக பேய்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். எப்போதும் பேய் படங்களை பார்ப்பதும், பேய்களை பற்றி சிந்திப்பதுமாய், கூடவே பேய் சம்பந்தமான விஷயங்களை சொல்லி கணவர் விஜய் சேதுபதியை கிலி ஏற்றுவதுமாய் சுவாரஸ்யமாய் நகர்கிறது இவர்களின் வாழ்க்கை.
பேய் இருக்கு! அது உனக்கும் ஒரு நாள் தெரிய வரும். அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்ல! என்று தன் மனைவி சொன்ன வார்த்தைகள் அவ்வப்போது இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது விஜய் சேதுபதிக்கு. ஒரு நாள் யதார்த்தமாக பீட்சா டெலிவரி பண்ண ஒரு பங்களா வீட்டிற்கு போகிறார். அங்கு தான் அவர் டைம் ஸ்டார்ட் ஆகுது. யப்பா... திரைக்கதையில் என்னமா திகில் கிளப்பி இருக்கிறார் இயக்குனர்.
காசு கொண்டு வர உள்ளே சென்ற பெண்மணி காணாமல் போக, உள்ளே சென்று பார்த்தால், அந்த பெண் பிணமாக சுவற்றில் தொங்க, கரண்ட் இல்லாமல், கதவையும் திறக்க முடியாமல், விஜய் சேதுபதியின் அவஸ்தகள் சொல்லி முடியாதவை. ஒரு நொடி கூட கவனத்தை சிதறவிடாமல், இருக்கையின் நுனிக்கு நம்மை கொண்டு வந்து, திக் திக் நிமிடங்களால் நம்மை அதிர வைக்கிறது இயக்குனரின் திரைக்கதை. குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது என்று சொல்லகூடிய அளவிற்கு படத்தில் திகில் விஷயங்கள் ஏராளம்.
இதையெல்லாம் எப்படி நம்பவது, இதெல்லாம் ரீல்-ஆ இல்லை ரியல்-ஆ என்ற கேள்வி எழும் போதே, அதற்கு அடுத்து வரும் காட்சிகளில் எதிர்பார்க்கவே முடியாத சில திருப்பங்கள் திரைக்கதையில் இருக்கிறது. எல்லாமே ‘டூப்’ சங்கதிகளாக இருந்தாலும் அதை ‘டாப்’பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். விஜய் சேதுபதி நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருகிறார். தமிழ் சினிமாவில் அவருக்கான தனிஇடம் இருக்கப்போவது உறுதி. விரிந்த கண்களோடு, வியர்வையில் பயந்தபடியே பேய் வீட்டில் அல்லாடும் காட்சிகளாகட்டும், காதல் காட்சிகளாகட்டும், நச்சுன்னு ஒரு நடிப்பு!
பல குறும்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தில் சபாஷ் வாங்குகிறார். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பாடல்கள் என எல்லாமே திரைக்கதையின் சுவாரஸ்யத்தை குறைக்காமல் அழாகவும் அளவாகவும் இருக்கிறது.
பீட்சா - இளசுகளின் ருசிக்கு ஏற்ற தீனி!
Comments
Post a Comment