கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி - தயாரிப்பாளர்கள் புகார்!!!

Sunday,28th of October 2012
சென்னை::கூடுதல் சம்பளம், இந்திப்பட மோகம் போன்ற காரணங்களால் தமிழ் படங்களுக்கு கதாநாயகிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிறைய படங்கள் கதாநாயகிகள் கிடைக்காமல் முடங்கி கிடக்கின்றன. படப்பிடிப்பை துவங்க முடியாமல் இயக்குனர்கள் தவிக்கின்றனர்.

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி, அமலாபால், அஞ்சலி போன்றோர் ரூ. 70 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடியே 25 லட்சம் வரை தங்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளனர். அதைவிட குறைவான சம்பளம் வாங்க அவர்கள் தயாராக இல்லை.

முன்பெல்லாம் கதாநாயகிகள் சம்பளத்தை பொருட்படுத்துவது இல்லை. முன்னணி கேரக்டர்களுடன் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டினர். சம்பளத்தை படப்பிடிப்பு துவங்கும் போதே முடிவு செய்தார்கள். ஆனால் தற்போது நடிகர்கள் பற்றி பொருட்படுத்துவது இல்லை. சம்பளத்தில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் வருத்தப்பட்டனர். சமீபத்தில் பெரிய ஹீரோ ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகியை அணுகியதாகவும் அவர் கதை கேட்கும் முன்பே சம்பளம் பற்றித்தான் பேசினார் என்றும் அவர்கள் கூறினர்.

தமன்னா, இலியானா, காஜல் அகர்வால் போன்றோரின் அதிக சம்பளத்தை கொட்டி கொடுக்கும் இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ் இயக்குனர்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகளை கூட எடுப்பது இல்லையாம். இதனால் கும்கி, சுந்தரபாண்டியன் படங்களில் நடித்துள்ள லட்சுமிமேனன் போன்ற புதுமுக நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. முதல் படத்துக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் வாங்கிய லட்சுமிமேனன் சுந்தரபாண்டியன் ஹிட்டானதால் சம்பளத்தை ரூ. 30 லட்சமாக உயர்த்தி விட்டார்.

விஜய்யை வைத்து டைரக்டர் விஜய் இயக்க உள்ள புதுப்படத்துக்கு கதாநாயகி இன்னும் கிடைக்கவில்லை. வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க கதாநாயகி வேட்டை பல மாதங்களாக நடந்தும் யாரும் சிக்கவில்லை. தனுசை வைத்து சற்குணம் இயக்கும் “சொட்டவாளக்குட்டி” படத்துக்கும் கதாநாயகி கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் படங்களை திட்டமிட்டபடி தொடங்க முடியாமல் தவிப்பில் உள்ளனர்.

Comments