Thursday,4th of October 2012
சென்னை::'அஜந்தா' என்ற வார்த்தையை கேட்டாலே, "அந்தப் படமா இளையராஜா இசையாச்சே!" என்று சொல்பவர்கள் கூடவே, "அது எப்போதே வெளிவந்த படமாச்சே!" என்றும் சொல்வார்கள். அதுதான் இல்லை. இளையராஜா இசையமைத்த இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. 2009ஆம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்து தேதியெல்லாம் குறித்து விளம்பரமும் செய்துவிட்டார்கள். இருப்பினும் ஏதோ சில காரணங்களால் பெட்டிக்குள் முடங்கிப்போனது இந்த அஜந்தா.
படம் வெளியாகும் முன்பே சிறந்த இசைக்கான தமிழக அரசின் விருதினை பெற்றுவிட்ட இப்பத்திற்கு இளையராஜா இசையமைத்ததே இப்படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். படமும் இசை சம்மந்தமானதுதான். தற்போது இப்படத்தை வெளியிட தயாராகிவிட்டார் இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜ்பா ரவிஷங்கர்.
இதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜ்பா ரவிஷங்கர் பேசுகையில், "தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயரான இப்படத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட நான் முடிவு செய்தேன். அப்போது வெளியாகியிருந்தால் இப்படம் பல கோடிகளை வசூலித்திருக்கும். அதுமட்டும் இன்றி ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுடனும் இப்படத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதுவும் முடியாமல் போனது. யாரிடமும் கைகட்டி நிற்க நான் விரும்பவில்லை. அதனால் தான் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை என்று காத்திருந்து இப்போது வெளியிடுகிறேன்." என்றவரிடம், இனி நீங்கள் தயாரிக்கும் அனைத்துப் படங்களுக்கும் இளையராஜா தான் இசையமப்பாரா? என்று கேட்டதற்கு,
இளையராஜா சம்மதிக்கும் வரை அவர் தான் இசையமைப்பார். ஒரு வேளை அவர் மறுத்து விட்டால் இனி என் படங்களுக்கு நானே இசையமைப்பேன்." என்றார்.
அஜந்தா படத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதற்காக பல சலுகைகளை ராஜ்பா ரவிஷங்கர் அறிமுகப்படுத்தியிருக்கிறாராம். அதாவது இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு பத்திரிகை விளம்பரத்தை கொண்டு வருபவர்களுக்கு இப்படத்தின் முதல் நாள் காட்சி டிக்கெட் ரூ.20க்கு கொடுக்கப்படுமாம். அதேபோல படத்தின் ரிலீஸ் கட்டிங் பேப்பர் மற்றும் விளம்பர கட்டிங் கொண்டு வருபவர்களுக்கு வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களுக்கும் அனைத்து தியேட்டர்களிலும் ரூ.10க்கு டிக்கெட் கொடுப்பார்களாம்.
Comments
Post a Comment