முத-ல் படிப்பு பிறகுதான் நடிப்பு! - லட்சுமி மேனன்!!!

Monday,1st of October 2012
சென்னை::பேட்டி என்றதும் குதூகலமாகிறார் லட்சுமிமேனன் "சுந்தரபாண்டியன்', "கும்கி' என அடுத்தடுத்த படங்களின் மூலம் தமிழ்த்திரை வானத்தில் உலா வரக் காத்திருக்கும் இளங்கிளி.
""இப்போதுதான் எனக்கு 15 வயதாகிறது. அதற்குள்ளாகவே தமிழ் சினிமாவில் பெரிய இடம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. தொடக்கமே "கும்கி', "சுந்தர பாண்டியன்' என பெரிய படங்கள். ஒரு விதத்தில் நினைத்தால் பயமாகவும் இருக்கிறது. தமிழ்நாடு பிடிக்கும். தமிழும் பிடிக்கும். பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்'' படபடக்க பேசுகிறார் லட்சுமி மேனன்.


தமிழ் சினிமாவுக்கு வந்தாகி விட்டது சரி, இதற்கு முன்....?


கேரளத்திலுள்ள திருவனந்தபுரம்தான் சொந்த ஊர். என் அப்பா ராமகிருஷ்ணன். வேலை நிமித்தமாக துபாயில் இருக்கிறார். அம்மா உஷா, டான்ஸ் பள்ளி நடத்தி வருகிறார். முன்பு அம்மா சென்னையில்தான் இருந்தார். இருந்தாலும் சின்ன வயதிலேயே குடும்பத்துடன் கேரளத்துக்கு வந்து விட்டார்கள். சென்னை கலாசேத்ராவில் டான்ஸ் கற்றுக் கொண்டார். இரண்டு பாட்டிகளும் டான்ஸ் டீச்சர்ஸ். இவர்களுக்கெல்லாம் ஒரே செல்லம் நான்தான்.
எனக்கும் டான்ஸ் மீது அலாதி ஈடுபாடு. பரதம், கதகளி இரண்டுமே தெரியும். இப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் நடந்த டான்ஸ் போட்டியை பார்க்க வந்த மலையாள இயக்குநர் விநயன் சார் "ரகுவின்டே சொந்தம் ரசியா' படத்தில் ஒரு சின்ன வேடம் தந்தார். இதுதான் நான் சினிமாவுக்கு வந்த கதை. அந்தப் படத்தை பார்த்த பிரபு சாலமன் சார் என்னை "கும்கி' மூலம் இங்கே கொண்டு வந்து விட்டார். இப்போது "சுந்தரபாண்டியன்' படத்தையும் முடித்து விட்டேன். அடுத்த படத்துக்கு காத்திருக்கிறேன்.


"கும்கி'யில் மலை வாழ் பெண்ணாக நடித்த அனுபவம் எப்படி?


இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என எதிர்பாக்கவில்லை. மலைவாசி பெண். பேச்சு முதல் நடை, உடை, பாவனை என எல்லாவற்றையும் மாற்றி நடிக்க வேண்டும். தலைமுடியில் இருந்து நகம் வரைக்கும் எல்லாமே மாற வேண்டிய ரோல். செருப்புக் கூட போடாமல் கொதிக்கிற பாதை மேல் நிற்க வேண்டும். பாதை இல்லாத வனப்பகுதிகளில் பயம் இல்லாமல் கால் வைக்க வேண்டும். முக்கியமான காட்சிகளில் முகத்தில் உணர்ச்சி காட்டி நடிக்க வேண்டும். சினிமா என்றால் ஜாலியாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன்.
இப்படியும் ஒரு சினிமா இருக்கிறதென பிரபு சாலமன் சார் காட்டினார். இந்த வயதில் இது மாதிரியான ஒரு சினிமா கிடைத்ததில் மகிழ்ச்சி. இது அதிர்ஷ்டம். இனி சினிமாவில் நடிக்க முடியாது என்ற நிலை வந்தால் கூட எனக்கு வருத்தம் இல்லை. "கும்கி' அவ்வளவு நன்றாக வந்திருக்கிறது. எனக்காக டப்பிங் பேசும் போது கொஞ்சம் படம் பார்த்தேன். சான்úஸ இல்லை. படம் வந்த பிறகு அல்லி.. அல்லி.. என என்னை கொண்டாடுவீங்க.


நீங்கள் சொல்லுவதை பார்த்தால் ஹீரோ விக்ரம் பிரபுவை விட உங்களுக்குத்தான் கதையில் ஸ்கோப் அதிகம் இருக்கும் போல?


அட எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் வந்திருக்கிறோம். அதுவும் ஹீரோ விக்ரம் பிரபு. சான்úஸ இல்லை. அவருக்கும் இது முதல் படம். சிவாஜி சார் பேரன், பிரபு சார் மகன் என எந்த பந்தாவும் இல்லை. பாறைகள் மீது சறுக்கணும். சட்டை போடாமல் வனப்பகுதியில் திரியணும். யானை மீது சவாரி செய்யணும். தந்தம் பிடித்து முத்தம் கொடுக்கணும். கூடவே இருந்து பார்த்தால் உங்களுக்கெல்லாம் பயம் வந்திருக்கும். நான் தைரியமாக இருந்தேன். சில நேரங்களில் எனக்கே பதறும். ஆனால் விக்ரம் பிரபு முகத்தில் துளியும் பயம் இருக்காது. பதற்றம் இல்லாமல் படத்தில் மிரட்டி எடுப்பார். அதோடு அவரிடம் வேலை வாங்குகிற பிரபுசாலமன் சார். நிஜமாகவே அவர் சூப்பர் டைரக்டதான்.


முதல் படத்திலேயே இவ்வளவு கண்ணியமாக நடித்தால், தமிழ் சினிமா உங்களை ஏற்றுக் கொள்ளுமா?


ஏற்றுக் கொண்டார்களே. "கும்கி' படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. போஸ்டர் பார்த்து விட்டு ""எங்கள் படத்தில் நடிக்கிறீங்களா?''ன்னு கேட்டது இயக்குநர் சசிகுமார் சார்தான். "சுந்தர பாண்டியன்' என பேர் வைத்து, கதை சொல்லி, ஷூட்டிங் போய் இதோ படம் ரிலீஸ் ஆகி விட்டது.
படம் பார்த்தவர்களிடம் கேளுங்கள். ""இந்த பொண்ணு எப்படி?''ன்னு. அந்தளவுக்கு பெர்மான்ஸ் காட்டியிருக்கிறேன். நானே எதிர்பார்க்காத கேரக்டர். நிஜத்தில் நான் ரொம்பவே சாப்ட். பத்து வார்த்தைகளில் கேள்வி கேட்டால், ஒரு வார்த்தையில்தான் பதில் சொல்லுவேன். எனக்கு போய் கலகலவென்று சீனுக்கு சீன் வசனம் வைத்து என்னை மாற்றி விட்டார்கள். ""பத்து நிமிஷத்து பத்து எக்ஸ்பிரஷன் கொடுக்கிறேயே''ன்னு சொல்லி ஆச்சரியப்பட்டார் சசிகுமார். தமிழ்நாட்டில் எனக்கு பிடித்த இடம் தேனி. அங்கேதான் ஷூட்டிங். சொல்லவே வேண்டாம். படம் நல்லாவே வந்திருக்கிறது. பாருங்கள். அப்படியே என்னையும் ஆதரியுங்கள்.


எல்லோருக்கும் ரோல் மாடல் இருப்பார்கள். சினிமாவை பொறுத்தவரையில் யார் உங்கள் ரோல் மாடல்? எது உங்களுக்கு கனவு படம்?


எனக்கு தமிழ் படங்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அம்மாவுக்கு தமிழ் படங்கள் பிடிக்கும் என்பதால் நானும் அப்படியே ஆகி விட்டேன். "மௌன ராகம்', "பூவே பூச்சூடவா', "சிந்து பைரவி' இந்த படங்களுக்கெல்லாம் அம்மா அடிமை. ஆனால் அதற்கு நான் எதிர்மறை. "சேது', "பிதாமகன்', "வாரணம் ஆயிரம்', "மைனா' இது மாதிரியான படங்களை பார்த்து ரசித்தவள் நான். அதே மாதிரியான படங்கள் வந்தால் நிச்சயம் இழக்க மாட்டேன். அதே சமயத்தில் நல்ல ரோல் என்றால் கிளாமருக்கும் பிரச்னை இல்லை. ரேவதி மேடம்தான் ரோல் மாடல்.


அப்படியென்றால் தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடிப்பீர்களா?


இல்லை. எனக்கு தமிழ் சினிமா பிடிக்கும். இரண்டு படங்களை முடித்து விட்டேன். ""படிப்புதான் முக்கியம்'' என அம்மா சொல்லி விட்டார். அதனால் இப்போதைக்கு படிப்பு. "சுந்தர பாண்டியன்' பார்த்தவர்கள் என்னை பாராட்டுகிறார்கள். அடுத்து "கும்கி'யும் இரண்டு படங்களும் வெளிவந்து எனக்கு என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்கிறதென பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் எந்த முடிவாக இருந்தாலும். விநயன் சார் கொடுத்த ஒரு சின்ன வாய்ப்பு மூலமாக மலையாளத்தில் நல்ல பேர் வாங்கி விட்டேன். தமிழும் நிச்சயம் கை கொடுக்கும்.


நீங்கள் எப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரிந்தால், நல்லாயிருக்குமே?



நான்தான் சொன்னனே. ரொம்பவே சாப்ட் டைப். ஆனால் இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறேன். "கும்கி'யும், "சுந்தர பாண்டிய'னும் என்னை மாற்றியிருக்கின்றன.
ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த சிலர் ""உன்னை மாதிரி துறு துறு பொண்ணை பார்த்ததே இல்லை''ன்னு சொன்னாங்க. அதை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான் வரும்.
எனக்கு இது பிடித்திருக்கிறது. நல்ல பெயர் வாங்கணும். நல்ல பொண்ணுன்னு எல்லோரும் பேசிக்கணும். மீடியா ஆள்களோடு எப்போதுமே தொடர்பில் இருக்க வேண்டும் என அப்பா சொன்னார். அதை நான் சரியாக செய்து வருகிறேன் என்று நினைக்கிறேன். நல்லா படிக்கணும். நல்ல படங்களாக நடிக்கணும். அது போதும்.

Comments