'தாண்டவம்'.திரை விமர்சனம்!!!

Friday,5th of October 2012
சென்னை::தெய்வத்திருமகள்' என்ற அமைதியான படத்தை கொடுத்த விக்ரம், இயக்குநர் விஜய், அனுஷ்கா, சந்தானம், யுடிவி கூட்டணியில் ஒரு அதிரடியான படமாக வெளியாகியிருக்கிறது 'தாண்டவம்'.

கண் தெரியாத விக்ரம், அவ்வப்போது சிலரை தேடிப் போய் கொலை செய்கிறார். அவ்வாறு அவர் கொலை செய்ய என்ன காரணம்? ஏன் அவருக்கு பார்வை பரிபோனது? என்பதே படத்தின் கதை.

ஒரு எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத பார்வையற்ற விக்ரம், லண்டனில் உள்ள சர்ச் ஒன்றில் காலையில் அமைதியாக பியானோ வாசிப்பதும், இரவில் சிலரைத் தேடிச் சென்று கொலை செய்வதும் என இருக்கிறார். அந்த கொலைகளை லண்டன் போலீஸ் அதிகாரியான நாசர் துப்பரிகிறார். இந்த நிலையில் விக்ரமை சந்திக்கும் மிஸ்.லண்டனான எமி ஜாக்சன் அவரை காதலிக்க, விக்ரம் தான் கொலையாளி என்ற உண்மை தெரிகிறது.

விக்ரம் ஏன் அந்த கொலைகளை செய்கிறார்? என்பதற்கு ஒரு பிளாஸ்பேக். இந்திய உளவுத்துறையில் முக்கியமான அதிகாரியாக பணிபுரியும் விக்ரம், இந்திய ராணுவம் தொலைத்த ஒரு பொருளை தேடி லண்டன் செல்ல, அங்கு அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாற்றும் அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவம் என்ன? அதில் விக்ரம் எப்படி பாதிக்கப்படுகிறார்? அதன் பிறகு நடப்பது என்ன? என்பதே க்ளைமாக்ஸ்.

படத்தின் முதல் பாதியில் விக்ரம் கொலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றாலும், அதன் பிறகு வரும் காட்சிகள் படத்தை ஆமை வேகத்தில் தான் நகர்த்துகிறது. இடைவேளைக்குப் பிறகு உளவுத்துறையில் பணியாற்றும் விக்ரம் லண்டனுக்கு பயணிப்பது, அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என படம் சூப்பர் பாஸ்ட்டாக நகர்கிறது.

பழிவாங்கும் ஃபார்மூலா தான் படத்தின் கரு என்றாலும், அதற்கு எக்கோ லொக்கேஷன், உளவுத்துறை, லண்டன் கதைக்களம் என்ற யுக்திகளை கையாண்டு திரைக்கதை அமைத்திருக்கும் விதமும், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்களமும் இயக்குநர் விஜய்க்கு சபாஷ் சொல்ல வைக்கிறது.

எப்போதும் போல விக்ரம் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறார். உளவுத்துறை அதிகாரியாக இருக்கும் போதும், பார்வையற்றவராக இருக்கும் போதும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வேறுபாட்டை தனது உடல் மொழியின் மூலம் அபாராமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் மூன்று நாயகிகள் இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமிப்பது எமி ஜக்சன் தான். ஆனால், ரசிகர்களின் மனதை ஆக்கிரமிப்பது அனுஷ்கா தான். லட்சுமிராய் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.

பல் மருத்துவராக வரும் அனுஷ்கா, விக்ரமை திருமணம் செய்துகொண்ட பிறகு, தனது லட்சியத்தைச் சொல்லி போடும் கன்டிஷன்களும், விக்ரமை போலீஸ் எஸ்ஐ யாக நினைத்து பேசுவதும் சுவாரஸ்யம்.

சமீபத்தில் வெளியான படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நாசர், இந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், இலங்கை தமிழராக அவரை காண்பித்திருப்பது வித்தியாசப்படுத்தி இருக்கிறது. தெலுங்கு நடிகர் கஜபதி பாபு, மாறுபட்ட கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சந்தானம், படத்தின் ஆரம்பத்தில் ஆரவரமாக அறிமுகமானாலும், அடுத்து வரும் காட்சிகளில் அடக்கி வாசித்திருக்கிறார். இருப்பினும் கிடைக்கும் சில வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருப்பதுடன், இதற்கு முன் எங்கேயோ கேட்ட ரகமாகவும் இருக்கிறது. நீரோவ்ஷாவின் ஒளிப்பதிவு நம்மை லண்டனுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றது போல இருக்கிறது.

கண் தெரியாத ஒருவரால் இப்படி செயல்பட முடியுமா? என்ற லாஜிக் உதைத்தாலும், அதை டேனியல்கிஷ் மூலம் இயக்குநர் சரி செய்திருக்கிறார். மேலும் படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் நம்பும்படியாகவும் அமைக்கப்பட்டிருப்பது மற்றொரு பலம்.

இடைவேளைக்குப் பிறகு வரும் ஒவ்வொரு காட்சிகளும் திரில்லாக நகர்கிறது. அதிலும் உளவுத்துறையில் உள்ள கருப்பு அதிகாரிகளால் நாட்டுக்கு ஏற்படும் ஆபத்து, லண்டனுக்கு சென்று விக்ரம் செயல்படும் விதம் போன்றவை படத்திற்கு விறுவிறுப்பு சேர்த்துள்ளது.

படத்தில் வன்முறை காட்சிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தும், அதை தவிர்த்து குடும்பத்தோடு பார்க்ககூடிய அளவுக்கு ஒரு பொழுதுபோக்கான படமாக இயக்குநர் விஜய் கொடுத்திருக்கிறார்.

இதற்கு முன்பு விக்ரம் படங்கள் சந்தித்த தோல்விகளை, 'தாண்டவம்' தவுடு பொடியாக்கி பலே வெற்றியை கொடுத்திருக்கிறது.

Comments