Sunday,14th of October 2012
சென்னை::ஆந்திர மாநில அரசு சார்பில் தெலுங்கு படங்களில் சிறந்த நடிகர்-நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ‘நந்தி விருது’ வழங்குகிறது. தெலுங்கு பட உலகில் ‘நந்தி விருது’ மிக உயரியதாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டுக்கான ‘நந்தி விருது‘ பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ படத்தில் நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான ‘நந்தி விருது’ கிடைத்துள்ளது.
ராமாயணத்தில் லவன்-குகன் கதையை அடிப்படையாக கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் ராமனாக என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவும், சீதையாக நயன்தாராவும் நடித்தனர். சீதையாக சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு ‘நந்தி விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெலுங்கில் சிறந்த படமாகவும் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிறப்பாக இசை அமைத்ததற்காக இளையராஜாவுக்கும் நந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி நயன்தாரா கூறியதாவது:-
எனக்கு ஆந்திர அரசின் மிக உயர்ந்த ‘நந்தி விருது’ கிடைத்து இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ‘ராமராஜ்ஜியம்’ படத்தில் கஷ்டப்பட்டு அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து நடித்தேன். கடவுள் அருளால் எனக்கு விருது கிடைத்து இருக்கிறது.
இந்தப் படத்தில் சீதையாக நடிக்க என்னை தேர்வு செய்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மட்டும் எனக்கு இந்த சந்தர்ப்பம் கொடுக்காவிட்டால் சீதையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்காது. இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். நான் நடித்த படங்களில் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ எப்போதும் என் நினைவில் இருக்கும்.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
சிறந்த நடிகருக்கான நந்தி விருது நடிகர் மகேஷ் பாபுவுக்கு (படம்: தூக்குடு) வழங்கப்படுகிறது. நாகார்ஜுனாவுக்கு சிறப்பு நடுவர் விருது கிடைத்துள்ளது. ஐதராபாத்தில் விரைவில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
Comments
Post a Comment