அனுஷ்கா நடிக்கும் மற்றொரு சரித்திரப் படம்!!!

Thursday,11th of October 2012
சென்னை::யோகா டீச்சராக இருந்து திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான அனுஷ்காவின் முதல் சுற்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் தோல்வியில்தான் முடிந்தது. அதன் பிறகு அவர் நடித்த 'அருந்ததி' என்ற படத்தில் இருந்துதான் அனுஷ்காவுக்கு கோவில் கட்டாத குறையாக ரசிகர்களும், ஹீரோக்களும் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அப்படி ஒரு வெற்றியை தேடி கொடுத்த 'அருந்ததி' ஆன்மிகம் கலந்த சரித்திரப் படமாகும். இதில் அருந்ததி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுஷ்காவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இடம்பிடித்த அனுஷ்கா, தற்போது மீண்டும் ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஆந்திராவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணி ருத்ரமா தேவி பற்றிய வரலாற்றுப் பின்னணியை கொண்டு உருவாகும் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜ இசையமைக்கிறார். குணசேகர் இயக்குகிறார்.

இந்த படத்தைப் பற்றி கூறிய அனுஷ்கா, "ஆந்திராவின் பெரும் பகுதியை ஆட்சி செய்த, மாபெரும் வீராங்கனையாக கருதப்படும் ராணி ருத்ரமா தேவியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் ருத்ரமா தேவியின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சவாலானது. ஏற்கனவே இதேபோன்று வரலாற்று பின்னணியை கொண்ட அருந்ததி படத்தில் நடித்த போது ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தார்கள். எனவே இந்த படத்திற்கும் அதே வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்." என்றார்.

Comments