Wednesday,31st of October 2012
மும்பை::உடல் நிலை பாதிக்கப்பட்ட பின்பும் ரஜினியின் வேகம் குறையவில்லை என புகழ்ந்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். ரஜினி ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன். இது குறித்து அவர் கூறியதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எத்தனை ஆண்டுகளாக அவர் சினிமாவில் இருக்கிறார். ஆனாலும் சினிமாவின் மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் மானிட்டர் முன் அமர்ந்து தான் நடித்த காட்சிகளை ஒரு குழந்தையை போல் பார்ப்பார். தான் நடித்த காட்சிகள் மட்டுமல்ல, மற்றவர்கள் நடித்த காட்சியைகூட பார்ப்பார். நன்றாக நடித்திருந்தால் உடனே கைதட்டி, பாராட்டுவார்.
அவரது கண்களை பார்த்தாலே சினிமா மீது அவருக்குள்ள ஈடுபாட்டை பார்க்க முடியும். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டபோது வருத்தப்பட்டேன். அவர் சீக்கிரம் குணமடைய பிரார்த்தித்த ஏராளமானவர்களில் நானும் ஒருத்தி. அவர் சிகிச்சை முடிந்து திரும்பிய பின் ஷூட்டிங்கில் பங்கேற்றார். அப்போது அவரை பார்த்தேன். உடல் நலம் பாதிப்பதற்கு முன் எந்த வேகத்துடன் இருந்தாரோ அதே வேகம் அவரது நடவடிக்கைகளில் தெரிந்தது. அவர் சிறிதும் மாறவில்லை. அதுதான் ரஜினி. கோச்சடையான் புது தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள படம். இதில் நடித்ததே தனி அனுபவம்தான். தமிழில் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியிலும் இப்படம் ரிலீசாகிறது. அதனால் இதை தமிழ் படம் என்று மட்டும் சொல்லக் கூடாது. இது சர்வதேச படம். இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார்
Comments
Post a Comment